பிரதமர் மோடியை சந்தித்த ஆந்திரா முதல்வர்- பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை
- பிரதமர் மோடியை ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் சந்தித்து பேசினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி. நட்டா, சபாநாயகர் ஓம்பிர்லா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதைதொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மோடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார்.
அப்போது, ஆந்திராவில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான நிதி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.