இந்தியா

2023-2024-ம் ஆண்டில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த நன்கொடை ரூ.2,244 கோடி

Published On 2024-12-26 05:29 GMT   |   Update On 2024-12-26 05:29 GMT
  • 2023-2024-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.288.9 கோடி கிடைத்துள்ளது.
  • சில மாநில கட்சிகள் தங்கள் 2023-2024 பங்களிப்பு அறிக்கைகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த தொகைகளின் ரசீதுகளையும் தானாக முன்வந்து அறிவித்துள்ளன.

புதுடெல்லி:

அரசியல் கட்சிகள் தனி நபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெற்ற நன்கொடை விபரங்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2023-2024-ம் ஆண்டில் பா.ஜ.க.வுக்கு தனி நபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூ.2,244 கோடி கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டை விட 2023-2024-ல் பா.ஜ.க. தனது பங்களிப்புகளில் 212 சதவீதம் உயர்வை பெற்றுள்ளது.




அதே நேரம் 2023-2024-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.288.9 கோடி கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.79.9 கோடி கிடைத்திருந்தது.

ப்ரூடென்ட் எலக்டோரல் டிரஸ்டிடம் இருந்து பா.ஜ.க. ரூ.723.6 கோடி மதிப்பிலான நன்கொடைகளை பெற்றுள்ளது. இந்த டிரஸ்ட் காங்கிரசுக்கு ரூ.156.4 கோடி வழங்கியுள்ளது. இதன் மூலம் 2023-2024-ம் ஆண்டில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த நன்கொடைகளில் மூன்றில் ஒரு பங்கும், காங்கிரசின் நன்கொடைகளில் பாதிக்கும் மேலானது ப்ரூடென்ட் டிரஸ்ட் மூலம் வந்துள்ளது.

2022-2023-ம் ஆண்டில் ப்ரூடென்டுக்கு நன்கொடை அளித்தவர்களில் மேகா என்க் அன்ட் இன்ப்ரா லிமிடெட், சீரம் இன்ஸ்டிடியூட், ஆர்செலர் மிட்டல் குழுமம் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை அடங்கும்.

பா.ஜ.க. மற்றும் காங்கிரசால் அறிவிக்கப்பட்ட மொத்த நன்கொடைகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட ரசீதுகள் இல்லை. இந்த விபரத்தை அரசியல் கட்சிகள் தங்கள் வருடாந்திர தணிக்கை அறிக்கைகளில் மட்டுமே அறிவிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

அதே நேரம் சில மாநில கட்சிகள் தங்கள் 2023-2024 பங்களிப்பு அறிக்கைகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த தொகைகளின் ரசீதுகளையும் தானாக முன்வந்து அறிவித்துள்ளன. இதில் பி.ஆர்.எஸ். கட்சி ரூ.495.5 கோடி பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.

Tags:    

Similar News