9-ம் வகுப்பு மாணவனின் வங்கி கணக்கில் ரூ.87 கோடி வரவு
- வங்கி கணக்கு விபரங்களை மீண்டும் சரிபார்த்த போது அதில் ரூ.87.65 கோடி அப்படியே இருந்தது.
- உடனடியாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று புகார் தெரிவித்தனர்.
நாட்டின் பல்வேறு நகரங்களில், சாதாரண நபர்களின் வங்கி கணக்கில் திடீரென எதிர்பாராத அளவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வரவாகும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் சையிப் அலி என்ற மாணவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.500 எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் தனது வங்கி கணக்கில் பணம் இருப்பு விபரத்தை சரிபார்த்த போது அதில், ரூ.87.65 கோடி இருந்ததை கண்டு திகைத்து போனார். அவர் தனது வங்கி கணக்கு விபரங்களை மீண்டும் சரிபார்த்த போது அதில் ரூ.87.65 கோடி அப்படியே இருந்தது.
இதனால் வீட்டுக்கு ஓடிச்சென்று தனது தாயிடம் விபரத்தை கூறினார். உடனடியாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட தொகை திரும்ப பெறப்பட்டது. அதன்பிறகு அவரது வங்கி கணக்கில் வெறும் ரூ.532 மட்டுமே இருந்தது. மாணவரின் கணக்கில் ரூ.87 கோடி வரவு வைக்கப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.