அனாதையாக நின்ற வாகனத்தில் ரூ.10 கோடி- 52 கிலோ நகைகள் சிக்கியது
- 52 இடங்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.
- நகை மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபால், இந்தூர், குவாலியர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
3 மாவட்டங்களில் மொத்தம் 52 இடங்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது ஏராளமான நகைகள், முக்கிய ஆவணங்கள், மொபைல்போன்கள் கைப்பற்றப்பட்டது. சோதனை நடந்த நிறுவனங்களின் வங்கி லாக்கரை திறந்து சோதனை செய்த போது அதில் இருந்த ரூ. 5 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தலைநகர் போபால் அருகே மண்டோரா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு வாகனம் அனாதையாக நின்று கொண்டிருந்தது.
அந்த வாகனம் மீது சந்தேகம் அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வாகனத்தில் கட்டுக்கட்டாக 10 கோடி ரூபாய் ரொக்கப்பணம், மற்றும் 52 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நகை மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணம்- நகை யாருக்கு சொந்தமானது என தெரியவில்லை. வருமான வரி சோதனைக்கு பயந்து அந்த ரூ. 10 கோடி பணம் மற்றும் 52 கிலோ நகைகளை வாகனத்தில் மறைத்து வைத்து அதிக நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நிறுத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.