இந்தியா

இதுவரை இல்லாத ஜனநாயக விரோத ஆவணம்: டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு

Published On 2023-08-01 11:33 GMT   |   Update On 2023-08-01 11:33 GMT
  • நமது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் டெல்லி மக்களுக்கு எதிரானது என்று ராகவ் சத்தா தெரிவித்தார்.
  • மாநிலங்களவையில் மசோதா தோற்கடிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக மக்களவையில் இன்று சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டத்திருத்த மசோதா- 2023 என்ற இந்த மசோதாவை உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் அறிமுகம் செய்து பேசினார்.

இந்த மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா கூறுகையில், இந்த மசோதா முந்தைய அவசரச் சட்டத்தை விட மோசமானது என்றும், நமது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் டெல்லி மக்களுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாக்களிலேயே மிகவும் ஜனநாயக விரோத பேப்பர் என்றும், இது ஜனநாயகத்தை அதிகாரத்துவம் மூலம் மாற்றிவிடும் எனவும் குறிப்பிட்டார்.

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசாங்கத்திடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் பறித்து ஆளுநர் மற்றும் அதிகாரவர்க்கத்திடம் ஒப்படைக்கிறது. இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியின் அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்க்கும் எனவும் ராகவ் சத்தா தெரிவித்தார்.

மக்களவையில் இந்த மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடிந்தாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு போதிய உறுப்பினர்கள் இருப்பதால் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

Similar News