'பாலியல் புகார் கொடுக்க பாஜக கட்டாயப்படுத்தியது': புகாரை வாபஸ் பெற்ற சந்தேஷ்காலி பெண் குற்றச்சாட்டு
- பாஜக நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணமுல் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
- பாஜகவினரால் தனக்கு ஏற்பட வாய்ப்புள்ள அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் புகார் கொடுத்தனர்.
இதனிடையே பாலியல் புகார் தொடுத்த பெண் ஒருவர் , காவல்நிலையத்தை அணுகி தனது புகாரை திரும்ப பெற்றுள்ளார்.
பாஜக மகிளா மோர்ச்சா நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவினர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்காக தன்னிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிய பாஜகவினர், பின்னர் அதனை தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனக்கு எவ்வித பாலியல் வன்கொடுமையும் நடக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது இந்த முடிவால் பாஜகவினரிடம் இருந்து தனக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது . ஆகவே அதிலிருந்து தனக்கு பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்த ஸ்டிங் ஆபரேஷனில், பாஜக உள்ளூர் தலைவர் ஒருவர் சந்தேஷ்காலி விவகாரம் தங்கள் கட்சியின் நாடக நடவடிக்கை என்று பேசும் வீடியோ வெளியானது.
இதனையடுத்து சந்தேஷ்காலி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.