நாங்கள் வளர்ச்சி பற்றி பேசுகிறோம்: காங்கிரஸ் ராஜஸ்தானை திவாலாக்கும் உத்தரவாதங்களை கொடுத்துள்ளது- பா.ஜனதா விமர்சனம்
- ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
- ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ்- பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு நலத்திட்டங்களை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது. அதேவேளையில், பா.ஜனதா ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் கஜானா திவாலாகுவதற்கான உத்தரவாதத்தை காங்கிரஸ் கொடுத்துள்ளதாக பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பூனவாலா கூறியிருப்பதாவது:-
இமாச்சல பிரதேசத்தில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்தது. பிரியங்கா காந்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்த மின்சார கட்டணம் குறையும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு டீசல் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் இல்லை என காங்கிரஸ் சொல்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தை திவலாக்குவதற்கான உத்தரவாதத்தை காங்கிரஸ் கொடுத்துள்ளது. ராஜஸ்தான் கருவூலம் காலியாக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பென்சன் வழங்க மாநில அரசால் முடியவில்லை.
அதேவேளையில் பா.ஜனதா வளர்ச்சி, நல்லாட்சி, கட்டமைப்பு, சட்டம்-ஒழுங்கு முன்னேற்றம் ஆகியவை குறித்து உத்தரவாதம் அளித்துள்ளது.
இவ்வாறு பூனவாலா தெரிவித்துள்ளார்.