டெல்லி முதல்வர், அமைச்சர்களை தேர்வு செய்வதற்கான 15 பேர் கொண்ட பட்டியல் தயார்: பிரதமர் மோடிக்காக காத்திருக்கும் மேலிடம்
- டெல்லி சட்டமன்ற தேர்தல் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
- தேர்தல் முடிவு வெளியாகி 6 நாட்கள் ஆகியும் முதல்வர் யார் என்பது குறித்து பாஜக முடிவு எடுக்கவில்லை.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியான நிலையில் இன்னும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதற்கு முக்கிய காரணம் முதல்வர் யார்? அவருடைய அமைச்சரவையில் இடம் பெறுவது யார்? என்பதை இன்னும் பாஜக மேலிடம் முடிவு செய்யவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா (இவர் இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது) முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவருடன் மேலும் 4 பேர் முதலமைச்சர் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.
இந்த நிலையில்தான பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி பிரான்ஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மூன்று நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றார். அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய நேரப்படி இன்று காலை அமெரிக்காவில் இருந்து இந்தியா புறப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர், அவருடைய அமைச்சரவையில் இடம பெறுபவர்கள், சபாநாயகர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 15 பேர் கொண்ட பட்டியலை பாஜக மேலிடம் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் இருந்து 9 பேரை தேர்வு செய்ய வேண்டுமாம். இந்த 9 பேரும் பிரதமர் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதனால் பிரதமர் அமெரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புவதற்காக பாஜக மேலிடம் காத்திருக்கிறது.
பிரதமர் மோடி இந்தியா திரும்பியதும், டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்குள் டெல்லி முதல்வர் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் டெல்லி மாநில பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி தேர்வு செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.
அவ்வாறு முடிவு எடுக்கப்பட்ட உடன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 17 அல்லது 18-ந்தேதி நடைபெற வாய்ப்புள்ளது. பிப்ரவரி 20 அல்லது 21-ந்தேதி புதிய முதல்வர் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.