இந்தியா

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!

Published On 2024-12-21 08:49 GMT   |   Update On 2024-12-21 08:49 GMT
  • பல்வேறு சொத்துக்கள் பற்றிய முக்கிய தகவல்களை மறைத்து தவறான தகவல்களை வழங்கியுள்ளார்.
  • தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது மற்றும் ஊழல் நடைமுறைகளுக்கு சமமானது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அவர் 6,22,338 வாக்குகள் பெற்று 4 லட்சத்துக்கு அதிகான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்டு கூட்டணி 2-வது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி 3-வது இடத்தையும் பிடித்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 2,11,407 வாக்குகளும், பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகளும் பெற்றனர்.

இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி கடந்தமாதம் 28-ந்தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தநிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி பெற்ற வெற்றியை எதிர்த்து, கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் தான் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரது சர்பில் ஹரிகுமார் என்ற வக்கீல் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா தனது மற்றும் குடும்பத்தினரின் சொத்துக்களை சரியாக வெளியிடவில்லை. அவர் தனது மற்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்கள் பற்றிய முக்கிய தகவல்களை மறைத்து தவறான தகவல்களை வழங்கியுள்ளார்.

இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது மற்றும் ஊழல் நடைமுறைகளுக்கு சமமானது. தவறான தகவல்களை வழங்கியதன் மூலம் வாக்காளர்களை தவறாக வழிநடத்தியிருக்கிறார். ஆகவே பிரியங்காவின் வெற்றியை ரத்து செ்ய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கேரள ஐகோர்ட்டுக்கு வருகிற 23-ந்தேதி முதல் ஜனவரி 5-ந்தேதி வரை விடுமுறை ஆகும். ஆகவே அதன்பிறகு பிரியங்கா காந்தியின் தேர்தல் வெற்றிக்கு எதிரான இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News