அரியானாவில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
- அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது.
- 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
புதுடெல்லி:
அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது. 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 462 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவார்கள்.
அரியானாவில் கடந்த 2 தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வில் மொத்தம் உள்ள 90 இடங்களில் 47 இடங்களை கைப்பற்றி இருந்தது. 2019-ம்ஆண்டு தேர்தலில் 40 இடங்களில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில் 3-வது முறையாகவும், அரியானாவில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. பா.ஜ.க.வுக்கு சவால் விடும் வகையில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைத்து களம் இறங்கி உள்ளன.
கடந்த 2 வாரங்களாக 90 தொகுதிகளிலும் அனல்பறக்கும் பிரசாரம் நடந்தது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெற்றது. இன்று காலை அரியானா சென்ற ராகுல்காந்தி 2 இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
நாளை (வியாழக்கிழமை) வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. தேர்தல் பணியாளர்களும் முழுமையாக பணியில் ஈடுபட உள்ளனர். நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடப்பதால் அதன் மீது மக்களிடம் எதிர்ப்பு அலை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் சம அளவில் வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. தொலைக்காட்சி ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் பா.ஜனதாவுக்கு 44 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 46 இடங்களும் கிடைக்கும் என்று கூறப் பட்டுள்ளது.
பல தொகுதிகளில் ஜனநாயக ஜனதா கட்சி வாக்குகளை பிரிக்கிறது. கடந்த தடவை இந்த கட்சி பா.ஜ.க. அணியில் இடம் பெற்று இருந்தது. 10 இடங்களில் வெற்றி பெற்று இருந்த இந்த கட்சி பிரிக்கும் வாக்குகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
அதுபோல பல தொகுதிகளில் சுயேட்சைகளின் ஆதிக்கமும் உள்ளது. அவர்கள் பிரிக்கும் வாக்குகள் 10 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் அரியானாவில் கணிசமான அளவுக்கு உள்ள தலித் இன மக்களின் வாக்குகளும் முக்கியமான தாக கருதப்படுகிறது. அரியானா மக்கள் தொகையில் 25 சதவீதம் அளவிற்கு தலித் இன மக்கள் உள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அரியானா தலித்துகளில் 68 சதவீதம் பேர் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து இருந்தனர்.
இதனால் இந்த தடவையும் அரியானா தலித்துகள் தங்களை ஆதரிப்பார்கள் என்று காங்கிரஸ் கூட்டணி தலை வர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 5-ந் தேதி ஓட்டுப் பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.
8-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.