இந்தியா

மக்களின் நகை- சொத்துக்களை பறிக்க காங்கிரஸ் திட்டம்: பிரதமர் மோடி பேச்சு

Published On 2024-04-26 13:27 IST   |   Update On 2024-04-26 13:27:00 IST
  • நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள்.
  • திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன.

கொல்கத்தா:

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் வடக்கு மால்டாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

இந்தியாவின் வளர்ச்சிக்கு மேற்கு வங்காளம் ஒரு காலத்தில் உந்துதலாக இருந்தது. சமூக சீர்திருத்தங்கள், அறிவியல், தத்துவ, ஆன்மிக முன்னேற்றங்கள் மற்றும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தாலும் கூட முக்கிய பங்காற்றியது. ஆனால் முதலில் இடதுசாரிகளும் பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தின் பெருமையையும், மரியாதையையும் குலைத்து, வளர்ச்சியைக் கூட தடுத்தது.

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே நிலவுகிறது. மத்திய அரசு வழங்கிய நிதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த கட்சி செய்த ஊழல்களுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தன. அதே நிலைதான் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அவர்களுக்கு காத்திருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள். இந்திய கூட்டணி 370-வது பிரிவை ரத்து செய்ய விரும்புகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் சொல்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் பல பயனாளிகளில் தலித்துகளும் அடங்குவர். இந்திய கூட்டணி உங்களது சொத்துக்களை கொள்ளையடிக்க பார்க்கிறது.

ஏழை மக்களின் சொத்துக்கள் அனைத்தையும் விசாரிக்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து எக்ஸ்ரே மிஷின் கொண்டு வந்து, நாட்டில் உள்ள அனைவருக்கும் எக்ஸ்ரே எடுப்பார்கள், நகை, சொத்து உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி, அதில் ஒரு பகுதியை தங்கள் வாக்கு வங்கிக்கு கொடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காத்து ஆதரவளிக்கிறது.

வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு உங்களது நிலங்களை கொடுத்து அவர்களை இங்கு திரிணாமுல் காங்கிரஸ் குடியமர்த்துகிறது. இந்த வாக்கு வங்கிக்கு உங்கள் சொத்துக்களை கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. நீங்கள் உயிருடன் இருக்கும்போதும், இறந்த பிறகும் கூட காங்கிரஸ் உங்களை கொள்ளையடிக்கும்.

திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன. ஆனால் உண்மையில் இந்த இரு கட்சிகளின் குணமும் சித்தாந்தமும் ஒன்றுதான். திருப்திப்படுத்துவது அந்த கட்சிகள் இடையே பொதுவான விஷயம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News