கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்: பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின
- மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- பெலகாவிக்கு வரும் மராட்டிய அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்து மராட்டியத்துக்கு கடந்த மாதம் கர்நாடக அரசு பஸ் இயக்கப்பட்டது. அப்போது மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பஸ் கண்டக்டர் தாக்கப்பட்டார்.
இந்த பிரச்சினை இருமாநிலத்திலும் மொழி பிரச்சினையாக மாறி பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த சம்பவத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு நடத்தப்போவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
கன்னட அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வழக்கம் போல் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் ஓடியது.
பெங்களூர் மற்றும் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. வங்கிகளுக்கு இன்று விடுமுறை என்பதால் வங்கிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கியது. ரெயில், மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் ஓடியது.
இந்த நிலையில் சிக்கமகளூர் பஸ் நிலையத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. அப்போது போராட்டக்காரர்கள் பஸ்நிலைய வளாகத்தில் திறந்து இருந்த கடைகளை அடைக்க சொன்னார்கள்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. மேலும் வலுகட்டாயமாக கடைகளை அடைக்கச் சொல்ல கூடாது என்று போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
இதேபோல் கர்நாடக முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக மைசூர் கிராமப்புற பஸ்நிலையத்தில் இயக்கப்பட்ட பஸ்களை போராட்டக்காரர்கள் மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் நகரின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
விஜயநகர மாவட்டத்திலும் வழக்கம் போல் பஸ்கள், ஆட்டோக்கள், கார் ஓடியது. பெரும்பாலான ஓட்டல்கள், கடைகள் திறந்து இருந்தன.
பெலகாவி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெலகாவியில் இருந்து மராட்டியத்துக்கு செல்லும் கர்நாடக அரசு பஸ்கள் மற்றும் மராட்டியத்தில் இருந்து பெலகாவிக்கு வரும் மராட்டிய அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பெலகாவி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் பல்வேறு இடங்களில் பெலகாவி மாவட்டத்தில் சாலைகளில் டயர்களை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில எல்லையில் அமைந்துள்ள பெலகாவி மாவட்டத்தில் மட்டும் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.