கொலை செய்யப்பட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் வந்த வினோதம்
- லலிதா பாய் என்ற பெண் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.
- இந்த கொலை குற்றத்திற்காக 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2023 ஆண்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் தற்போது உயிரோடு வீடு திரும்பிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லலிதா பாய் என்ற பெண் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை 2023 இல் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்நிலையில், லலிதா பாய் தற்போது உயிரோடு வீடு திரும்பியுள்ளது அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
லலிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், "ஷாருக் என்ற நபர் தன்னை ஒருவரிடம் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அதன்பின்பு என்னை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிற்கு அழைத்து சென்றார்கள். செல்போன் இல்லாததால் எனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.
2023 செப்டம்பரில் லலிதா பாய் காணாமல் போன சமயத்தில் லாரி விபத்தில் உடல் நசுங்கி பெண் ஒருவர் உயிரிழந்த வீடியோ வெளியானது. இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த டாட்டூவை பார்த்து இது லலிதா தான் என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் இம்ரான், ஷாருக், சோனு, எஜாஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.