கேரளாவில் குழந்தைகளை சிக்கவைக்கும் போதைப்பொருள்: பள்ளி மாணவிகளும் அடிமையாவதாக தகவல்
- கேரளாவில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
- தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கூட போதைப் பொருட்கள் எளிதாக கிடைக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் அனைத்து வளங்களும் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான நிலப்பகுதி வனம் மற்றும் நீர்நிலைகள் நிறைந்தவையாக திகழ்கிறது. மேலும் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் அங்கு இருப்பதால் கடவுளின் தேசம் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்படிப்பட் பெருமைகள் நிறைந்த கேரளாவில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மட்டுமன்றி சடடவிரோத போதை மருந்தாக இருக்கும் எம்.டி.எம்.ஏ. பயன்பாடும் அதிகமாக இருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் கடத்தல்காரர்களிடம் கோடிக்கணக்கில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் சிக்குவதே அதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். போதைப் பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
அவர்கள் மட்டுமின்றி தற்போது பள்ளி மாணவர்களும் அதிகளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அங்கு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கூட போதைப் பொருட்கள் மிகவும் எளிதாக கிடைக்கிறது.
தொடக்கப்பள்ளி வகுப் பறைகளை கூட போதை பொருட்கள் எளிதில் சென்றடைவதால் குழந்தை கள் போதை பழக்கத்தில் சிக்கி வரும் அதிர்ச்சி தகவல் சமீபத்திய ஆய்வு ஒன்றில் வெளியாகியிருக்கிறது.
கேரளாவில் குழந்தைகள் போதை பழக்கத்திற்கு உள்ளாவது குறித்து கோட்டயத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் ஆலோசகர் அலீஷா சனிஷ் வேதனையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எங்களின் மையத்தில் மறுவாழ்வு பெற்ற 210-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இரண்டாம் வகுப்பிலேயே 70 சதவீதம் பேர் போதை பழக்கத்திற்கு உள்ளானது தெரியவந்தது.
இந்த மையத்தில் போதைப் பொருள் பழக்கத்தில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட போராடுகிறார்கள்.
எங்கள் மையத்திற்கு வந்த 12 வயது சிறுவன் ஒருவன் மழலையர் பள்ளியில் படிக்கும் போதே ஹாஷிஸ் எண்ணையை பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறான். கிளர்ச்சி அல்லது விரக்தி காரணமாக அந்த சிறுவன் அதனை பயன்படுத்தத் தொடங்க வில்லை.
தன்னை விட பெரிய குழந்தைகள் பயன்படுத்தியதை பார்த்து, தானும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயன்படுத்த விரும்பி இருக்கிறார். பின்பு அதனை பயன்படுத்தியிருக்கிறார். அது கொடுத்த உணர்வு அவருக்கு பிடித்திருக்கிறது. அதனால் அதனை பயன்படுத்தியிருக்கிறார்.
இப்படித்தான் பல குழந்தைகள், சிலர் பயன்படுத்துவதை பார்த்து ஆர்வம் காரணமாக தாங்களும் பயன்படுத்தி போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்வத்தின் காரணமாக போதை பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாவதை போன்று போதைப் பொருள் வாசனை பிடித்து அடிமையாகுபவர்களும் இருக்கிறார்கள். கோட்டயம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் சம்பவத் தன்று பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்திருக் கிறான்.
அப்போது அவனின் மீது வித்தியாசமான வாசனை வந்ததை அவனது தந்தை கண்டுபிடித்தார். அந்த வாசனையை மறைக்க அந்த சிறுவன் 'மா' இலைகளை தின்றபடி இருந்திருக்கிறார். இந்த வித்தியாசமான பழக்கத்தை சிறுவனின் பெற்றோர் கவனித்தனர். அவனது செயல்பாடு மற்றும் பேச்சில் ஆக்ரோஷம் அதிகமாக இருந்ததையும் பார்த்தனர்.
ஒரு நாள் அந்த சிறுவன் தனது இளைய சகோதரருடன் சண்டையிட்டார். அப்போது தனது சகோதரனின் மீது அந்த சிறுவன் கத்திரிக்கோலை வேகமாக வீசினார். அந்த கத்திரிக்கோல் அங்கிருந்த டி.வி. மீது விழுந்தது. டி.வி.யின் ஸ்கிரீன் உடைந்தது. சிறுவனின் அந்த ஆக்ரோஷ செயலை பார்த்த பெற்றோர் பீதியடைந்தனர்.
இதையடுத்து அந்த சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். சிறுவனின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டதில் அவனுக்கு போதை பழக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து விடுபட அவனுக்கு சிகிச்சை பெற செய்திருக்கின்றனர்.
போதை பழக்கத்திற்கு அடிமையாகும் சிறுவர்கள் மூர்க்கத்தனமாக மாறி விடுவதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளதாக ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பயன்பாடு ஒருவருக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது? என்று திருவனந்தபுரத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் டிபின்தாஸ் கூறியிருப்பதாவது:-
எம்.டி.எம்.ஏ. போன்ற போதை பொருட்கள் பயன்பாடு கடந்த ஆண்டில் கஞ்சாவை முந்தியுள்ளது. இது ஒருவரது உணர்வை மட்டும் மாற்றாது. அவரது தன்னிலையை அழிக்கிறது.
கடந்த ஆண்டில் எங்களின் மையத்தில் 36 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதித்தோம். மேலும் போதை பழக்கத்ததால் புற்று நோயாளிகளாகிய 47 பேருக்கு சிகிச்சையும் அளித்தோம்.
18 முதல் 22 வயதுடைய 116 இளைஞர்கள் உள்நோயா ளியாகவும், 80 பேர் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்றனர். மொத்தமாக கடந்த ஆண்டு எங்களிடம் 530 பேர் நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆவர்.
பலர் தங்களது இளைமை காலங்களில் போதை பழக்கத்திற்க அடிமையானவர்கள். மேலும் பலர் பள்ளி படிப்பு காலத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அவர்கள் பள்ளிப் படிப்பையும் தொடர முடியாத நிலைக்கு சென்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இயக்குனர் பிரான்சிஸ் மூத்தேடன், போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற பள்ளி மாணவிகளும் வரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது:-
பள்ளி மாணவிகள் அதிரப்பள்ளி போன்ற சுற்றுலா தலங்களுக்கு பள்ளி நேரத்தில் செல்கின்றனர். தங்களின் நண்பர்களுடன் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். பின்னர் மாலையில் வீட்டுக்கு வழக்கம்போல் திரும்பி வந்து விடுகின்றனர்.
திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நீர்வீழ்ச்சி அதிரப்பள்ளி. அதுபோன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அனைவருமே போதை பழக்கத்திற்கு சென்று விடுவதில்லை. சிலர் அந்த பழக்கத்திற்கு தள்ளப்படு கிறார்கள்.
முதலில் போதைப் பொருளை இலவசமாக கொடுக்கிறார்கள். அதன்பிறகு விலைக்கு வாங்க வைக்கிறார்கள். போதைப் பொருள் விற்பனைக்கு பள்ளி மாணவிகள் இழுக்கப்படுகிறார்கள். அவர்கள் பெரியவர்கள் ஆகவதற்கு முன்னதாகவே கடத்தல்காரர்களாக மாறி விடுகிறார்கள். இது ஒரு தீய சுழற்சி.
போதைப்பொருள் பயன்பாடு ஆரம்ப காலத்தில் ஒருவரின் மூளை வளர்ச்சியை நிரந்தரமாக மாற்றும். ஒரு குழந்தைக்கு மரபணு பாதிப்பு இருந்தால் 18 வயதுக்கு பிறகு போதை பழக்கத்தில் இருந்து வெளியேற முடியாது. அவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் போதை பழக்கத்துக்கு அடிமையாகலாம். மேலும் அவர்களுக்கு மனநல கோளாறுகளும் ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
பள்ளி குழந்தைகள் தொடக்கக்கல்வி படிக்கும் போதே, போதை பழக்கத்தில் சிக்குவது பற்றி வெளியாகியிருக்கும் தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.