தொகுதி மறுசீரமைப்பு குறித்து உண்மையிலேயே கவலைப்படுகிறீர்களா?- ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் கேள்வி
- ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பிராந்தியத்தின் நலத்தை பற்றி உண்மையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களா?
- தேவையில்லாத சந்தேகங்களை எழுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.
சென்னையில் இன்று பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்- மந்திரிகள் உள்பட 24 கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை பார்த்து உண்மையிலேயே கவலைப்படுகிறீர்களா? அல்லது அரசியல் நோக்கத்திற்காகவா? என ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண் குமார் கூறியதாவது:-
என்னுடைய கருத்தின்படி, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பிராந்தியத்தின் நலத்தை பற்றி உண்மையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களா? அல்லது அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காகவா? என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அவர்கள் இது பற்றி சிந்திக்கட்டும். ஆனால் மீடியாக்கள், உண்மையிலேயே தொகுதி மறுசீரமைப்பு பணிகள் தொடக்கப்பட்டுள்ளதா? என அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பும் தொடங்கப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனையும் தொடங்கப்படவில்லை. சட்டம் தொடர்பான வரைவு கூட இன்னும் செய்யப்படவில்லை.
தொகுதி மறுசீரமைப்பு சட்டம் வரைவு உருவாக்கும்போது, மத்திய அரசு செயல்முறைக்கு தயாராகும்போது, இது தொடர்பாக கேள்வி எழும்.
தேவையில்லாத சந்தேகங்களை எழுப்புவது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவரையொருவர் நம்புவதும், அனைவரையும் அழைத்துச் செல்வதும் ஜனநாயகத்தின் சாராம்சம். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மற்றவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அருண் குமார் தெரிவித்துள்ளார்.