சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் தகராறு.. கோவிலில் மூத்த பூசாரியை குத்திக் கொலை செய்த சக பூசாரி
- திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான் கோவில் அமைந்துள்ளது.
- கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை பூசாரி சிவ்பால் அணைத்துள்ளார்.
ராஜஸ்தானில் கோவில் பூசாரி பூஜை செய்வது தொடர்பான தகராறில் சக பூசாரியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா (Dausa) மாவட்டத்தில் லால்சோட் எல்லைக்கு உட்பட திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான்கோவில் அமைந்துள்ளது. இங்கு பரசுராம் தாஸ் மகாராஜ் (60 வயது).மற்றும் சிவ்பால் தாஸ் ஆகியோர் பூசாரிகளாக உள்ளனர்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவிலில் சாமி சிலைக்கு ஆரத்தி காட்டுவது தொடர்பாக இருவரும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிவ்பாலை பரசுராம் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி சிவ்பால் தாஸ், பரசுராமை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
கோவிலுக்குள் பூசாரி உடல் கிடப்பதை அறிந்து உள்ளூர் மக்கள் திரண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் தப்பியோடிய பூசாரி சிவ்பால் கோவிலுக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் காயமுற்ற நிலையில் போலீசிடம் பிடிபட்டார். அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை சிவ்பால் அணைத்துவிட்டு அதன் பின் கொலை செய்ததும் தெரியவந்தது. கோவில் பூசாரி சக பூசாரியால் கோவிலில் வைத்தே கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.