மும்பை - நாக்பூர் சம்ருத்தி சாலையில் சுங்க கட்டணம் உயர்வு
- 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது.
- சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.
மும்பை:
மும்பை - நாக்பூர் இடையே ரூ.55 ஆயிரம் கோடி செலவில் 701 கி.மீ. தூரத்துக்கு சம்ருத்தி விரைவு சாலை போடும் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தற்போது நாக்பூர் முதல் இகத்பூரி வரை பணிகள் முடிந்து சாலை திறக்கப்பட்டுள்ளது. இகத்பூரில் இருந்து அம்னே (தானே) வரை சாலைத்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது. சாலைப்பணி முழுமையாக முடிந்த பிறகு பயண நேரம் மேலும் குறையும்.
இந்தநிலையில் வருகிற 1-ந் தேதி முதல் சம்ருத்தி சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.
தற்போது இலகுரக வாகனங்களுக்கு கி.மீ.க்கு ரூ.1.73, வணிக இலகுரக வாகனங்களுக்கு ரூ.2.79, கனரக வாகனங்களுக்கு ரூ.5.85, 3 ஆக்சில் கனரக வாகனங்களுக்கு ரூ.6.83, கட்டுமான கனரக எந்திரங்களுக்கு ரூ.9.18, 7-க்கு மேற்பட்ட ஆக்சில் வாகனங்களுக்கு ரூ.11.07 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முறையே ரூ.2.06, ரூ.3.32, ரூ.6.97, ரூ.7.60, ரூ.10.93, ரூ.13.30 ஆக உயர்த்தப்பட்டது.
அதாவது நாக்பூர் - இகத்பூரி இடையே ரூ.1,080 ஆக இருந்த இலகுரக வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.1,290 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மினிபஸ் போன்ற இலகுரக வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.1,745-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 75 ஆகவும், பஸ், லாரி உள்ளிட்ட 2 ஆக்சில் கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்து 655-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 750 ஆகவும், கனரக கட்டுமான எந்திரங்களுக்கான கட்டணம் ரூ.5 ஆயிரத்து 740-ல் இருந்து ரூ.6 ஆயிரத்து 830 ஆகவும், 7 ஆக்சில் அல்லது அதற்கு மேற்பட்ட கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.6 ஆயிரத்து 980-ல் இருந்து ரூ.8 ஆயிரத்து 315 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த சுங்க கட்டணம் வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து 2028-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.