100 நாள் வேலைக்கான ஊதியம்: பாரபட்சமாக நிதி விடுவிப்பு என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு- மத்திய அரசு மறுப்பு
- ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் பெறவில்லை- கேரளமாநில எம்.பி.
- 15 நாட்களுக்கு மேல் நிதி விடுவிக்கவில்லை என்றால் வட்டியுடன் ஊதியம் வழங்கப்பட வேண்டும்- கனிமொழி எம்.பி.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் கிராமப்புற எழை மக்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. மக்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்குகிறது. ஆனால், ஊதியத்தை விடுவிக்காமல் பல மாதங்கள் நிலுவையில் வைத்துள்ளதாக மத்திய அரசு மீது தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க அரசுகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.
இன்று கேரள மாநில எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக இன்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார். அவர் பேசும்போது "இத்திட்டம் தேவையை அடிப்படையாக கொண்டது. 15 நாட்களுக்கு மேல் நிதி விடுவிக்கவில்லை என்றால், தொழிலாளர்களுக்கு வட்டியுடன் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் என மந்திரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். இருந்தபோதிலும், நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.
காங்கிரஸ் எம்.பி. ஆதூர் பிரகாஷ் பேசுகையில் "ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் பெறவில்லை. இந்த திட்டத்தின் கீழ் 811 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. பாராளுமன்ற நிலைக்குழு சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க பரிந்துரை செய்துள்ளது. நிலுவையில் உள்ள தொகையை அரசாங்கம் தாமதமின்றி விடுவிக்குமா?" என்றார்.
இதற்கு மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை அஅச்சர் சந்திர சேகர் பெம்மாசானி பதில் அளித்து கூறியதாவது:-
கடந்த வருடம் கேரளா இத்திட்டத்தில் 3500 கோடி ரூபாய் பெற்றுள்ளது. பணத்தை விடுவிப்பதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலுவையில் இருக்கும் நிதி இன்னும் சில வாரங்களில் விடுவிக்கப்படும்.
சட்டத்தின் அடிப்படையில், நிதி விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால், மாநில அரசு முதலில் ஊதியம் வழங்கும். பின்னர் மத்திய அரசு நிதியை விடுவிக்கும். தமிழ்நாடு ஏற்கனவே 7300 கோடி ரூபாய் பெற்றுள்ளது. 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடும்போது 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு 10 கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிறது. பாரபட்சம் என்பதற்கு இடமில்லை" என்றார்.