டெல்லி: ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ரேகா குப்தா
- டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து துறைக்கு 12952 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
26 வருடத்திற்குப் பிறகு டெல்லி சட்டமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சர் ரேகா குப்தா பெண்களுக்கு அதிகாரமளித்தல், கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் டெல்லி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பெண் எம்.எல்.ஏ. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றார்.
நிதித்துறையை வைத்திருக்கும் ரேகா குப்தா இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கியம்சங்கள்:-
* டெல்லியின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மூலதன செலவு 28 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* யமுனை நதியை சுத்தம் செய்ய 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 40 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பரவலாக்குவதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே ஆற்றில் நுழைவதை உறுதி செய்யப்படும்.
* பழைய கழிவு நீர் குழாய்களை மாற்றுவதற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* சுத்தமான குடிநீர் மற்றும் துப்புரவு தொடர்பான திட்டங்களுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* சுகாதாரத்துறைக்கு 6874 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* போக்குவரத்து துறைக்கு 12952 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் ஊழலை தடுப்பதற்கு பிங்க் கலர் டிக்கெட் வழங்குவதற்குப் பதிலாக கார்டு வழங்கப்படும்.
* மாதந்தோறும் பெண்களுக்கு 2500 ரூபாய் வழங்குவதற்காக 5100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* பெண்கள் பாதுகாப்பிற்காக டெல்லியில் கூடுதலாக 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
* 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் 1,200 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். இதற்கான 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* நரேலா பகுதியில் புதிய கல்வி முனையம் அமைக்கப்படும்.
* 40 கோடி ரூபாயில் பும்மன்ஹெரா பகுதியில் நவீன கோசாலைகள் அமைக்கப்படும்.
பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:-
இந்த பட்ஜெட் நாட்டின் தலைநகரான டெல்லியின் வளர்ச்சிக்கான முதல்படி. கடந்த பத்தாண்டுகளில் வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் டெல்லி பின்தங்கியுள்ளது. முந்தைய அரசாங்கம் தேசிய தலைநகரின் பொருளாதார ஆரோக்கியத்தை கரையான்களைப் போல அழித்துவிட்டது.
இது வெறும் பட்ஜெட் மட்டுமல்ல. டெல்லியின் எதிர்காலத்திற்கான தொலைநோக்கு பார்வை. இந்த பட்ஜெட்டில் சில இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். இப்போது டெல்லி வெற்றி வாக்குறுதிகள் கொண்டதாக இல்லாமல் நம்பிக்கையின் நகரமாக இருக்கும் ரேகா குப்தா தெரிவித்தார்.
இவ்வாறு ரேகா குப்தா தெரிவித்தார்.
கடந்த முறை ஆம் ஆத்மி தாக்கல் செய்த பட்ஜெட்டின் மதிப்பை விட இந்த முறை மொத்த பட்ஜெட் மதிப்பு 31.5 சதவீதம் அதிகமாகும்.