இந்தியா
உ.பி.யில் மாஃபியா கும்பலை ஒழித்து, மருத்துவ கல்லூரிகளை திறந்துள்ளோம் - யோகி ஆதித்யநாத்

உ.பி.யில் மாஃபியா கும்பலை ஒழித்து, மருத்துவ கல்லூரிகளை திறந்துள்ளோம் - யோகி ஆதித்யநாத்

Published On 2025-03-25 15:35 IST   |   Update On 2025-03-25 15:35:00 IST
  • 2017-க்கு முன்பு மாநிலத்தில் கலவரங்கள் அடிக்கடி நடந்தது.
  • இன்று, உத்தரபிரதேசம் தன்னிறைவு பெற்றுள்ளது.

உத்தரபிரதேசத்தில் முந்தைய அரசாங்கம் கடைபிடித்த ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாஃபியா என்ற கொள்கையை மாற்றியமைத்து ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்று கொள்கையை பாஜக கொண்டு வந்ததாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

கோரக்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் பேசியயோகி ஆதித்யநாத், " 2017 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் உத்தரபிரதேசத்தை மாற்றியமைத்துள்ளது.

முன்பு, உத்தரபிரதேசம் வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. வேலையின்மை தலைவிரித்தாடியது. இன்று, உத்தரபிரதேசம் தன்னிறைவு பெற்றுள்ளது. நாட்டின் முன்னணி மாநிலமாக உத்தரபிரதேசம் மாறியுள்ளது.

2017-க்கு முன்பு மாநிலத்தில் கலவரங்கள் அடிக்கடி நடந்தது. முந்தைய அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாஃபியாவைக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கியது. அவர்கள் நில அபகரிப்பு, சட்டவிரோத சுரங்கம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களின் அடியாட்கள் வியாபாரிகள் மற்றும் பெண்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்தனர்.

"நாங்கள் இந்த மாஃபியாக்களை ஒழித்து கட்டினோம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாஃபியா என்ற கொள்கையை மாற்றியமைத்து ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்று கொள்கையை அறிமுகப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினோம்.

ஒரு காலத்தில் முதலீட்டாளர்களால் புறக்கணிக்கப்பட்ட மாநிலம், இப்போது நாட்டின் சிறந்த முதலீடு செய்யும் மாநிலமாக மாறியுள்ளது.

முன்பு சாலைகள் மோசமான நிலையில் இருந்தன. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான விரைவுச் சாலைகளைக் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் தான்.

இந்தியாவின் மிக விரிவான ரெயில்வே நெட்வொர்க், அதிக எண்ணிக்கையிலான மெட்ரோ ரெயில் நகரங்கள் இந்த மாநிலத்தில் உள்ளன. உத்தரபிரதேசம் நாட்டில் உணவு தானிய உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

Tags:    

Similar News