மச்சினியை திருமணம் செய்ய விரும்பி மனைவியை கார் ஏற்றி கொன்ற கணவன் கைது
- இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
- மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள அங்கித் விரும்பியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் மனைவியின் தங்கையை திருமணம் செய்வதற்காக நண்பனின் உதவியுடன் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கித் குமார் என்பவர் கிரண் (30) என்ற பெண்ணை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
மார்ச் 8 ஆம் தேதி அங்கித் தனது மனைவியை தனது மாமியார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் பெட்ரோல் போடும் நேரத்தில் சாலையோரம் இருந்த கிரண் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக கணவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்து நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், காரின் உரிமையாளர் அங்கித்தின் நண்பர் சச்சின் என கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, விபத்தில் பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், அங்கித் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. ஆகவே தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், இதற்கு மனைவியின் தங்கை மறுப்பு தெரிவித்ததால் மனைவியை கார் ஏற்றி கொன்றேன் என்று அங்கித் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.