
இந்தியாவில் கடந்த ஆண்டு 22 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு
- சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.
- இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர்களாக இருப்பது தெரியவருகிறது.
2024-ம் ஆண்டில் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதும், அவர்களில் 4-ல் ஒரு பங்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் ஆவார்கள் என்பதும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. தெருநாய்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.
நாய்க்கடி பாதிப்புக்கு மருந்து இருக்கிறது என்றாலும், வெறிநாய்க் கடியால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் பிழைப்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. அதாவது, நாய்க்கடியால் பாதிக்கப்படும் ஒருவர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் அதில் இருந்து மீண்டு விடுகிறார்.
ஆனால் அதுவே நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் கிருமிகள் (வெறிநோய்) நேரடியாக மூளையை தாக்கும்போதுதான் அந்த நபர் மரணத்தை தழுவும் சூழல் ஏற்படுகிறது. இதனை வெறிநாய்க்கடி பாதிப்பு என்றும் சொல்கிறார்கள்.
இப்படியாக உலகளவில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெறிநாய்க்கடி பாதிப்பால் மரணம் அடைவதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் இந்தியாவை எடுத்துக்கொண்டால், நாய்க்கடி பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருவதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அதன்படி, இந்தியாவில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் 5 லட்சத்து 19 ஆயிரத்து 704 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர்களாக இருப்பது தெரியவருகிறது.
நாய்க்கடி பாதிப்பில் மராட்டியத்துக்கு அடுத்தபடியாக தமிழகம்தான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த 2024-ம் ஆண்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 4 லட்சத்து 41 ஆயிரத்து 804 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, இந்தியாவில் 2024-ம் ஆண்டில் 54 ஆக இருக்கிறது. இறப்பு எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு முன்பு 2023-ம் ஆண்டில் 50 ஆகவும், 2022-ம் ஆண்டில் 21 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.