கர்நாடக எல்லையில் இன்று கன்னட அமைப்பினர் சாலை மறியல்- 30 பேர் கைது
- கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- தமிழக-கர்நாடகா எல்லையில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெலகாவியில், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து பஸ் கண்டக்டரை தாக்கிய வர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பஸ் டிரைவர் மீதான மராட்டிய தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும், பெலகாவி காப்பாற்றப்பட வேண்டும்.
எம்.இ.எஸ். கட்சியை தடை செய்ய வேண்டும். ,மேகதாது , கலச பண்டூரி, மகதாயி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தின் எல்லைப் பகுதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னட சலுவளி வாட்டள் கட்சி தலைவர் வாட்டள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் சார்பில், கர்நாடக மாநிலத்தில் `அகண்ட் கர்நாடக பந்த்' என்ற பெயரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி ஆர்ச் அருகில், இன்று காலை, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில், கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மஞ்சுநாத் தேவா உள்ளிட்ட 30 பேரை கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால் இன்று தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து எல்லை பகுதியில் கர்நாடகா மற்றும் தமிழக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.