பாராளுமன்றத்தில் தொடர் இடையூறு: செல்வத்தை உருவாக்குபவர்கள் மீது சர்ச்சை கூடாது - சத்குரு
- வருகிற 20-ந்தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.
- பாரதம் பவ்ய பாரதமாக மாறுவதற்கான ஒரே வழி இதுதான்
இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
பாராளுமன்றம் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவை நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் அவை நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறவில்லை. அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சோரோஸ்- சோனியா காந்தி விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக விவாதம் நடத்த பா.ஜ.க. கோரிக்கை வைக்கிறது. இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள மதகுரு ஜாக்கி வாசுதேவ்,
உலகிற்கு ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக இருக்க நாம் விரும்பும் போது, இந்திய பாராளுமன்றத்தில் இடையூறுகள் ஏற்படுவதைக் காண்பது வருத்தமளிக்கிறது.
இந்தியாவின் செல்வத்தை உருவாக்குபவர்கள், வேலை வாய்ப்பை வழங்குபவர்களை அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளாகக்கூடாது.
முரண்பாடுகள் இருந்தால், அதை சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு உரிய முறையில் அதற்கு தீர்வு காண வேண்டும் ஆனால் அவர்களை அரசியல் கால்பந்தாக பந்தாடக்கூடாது.
மிக முக்கியமாக, இந்திய வணிகங்கள் செழிக்க வேண்டும்.பாரதம் பவ்ய பாரதமாக மாறுவதற்கான ஒரே வழி இதுதான்என்று தெரிவித்துள்ளார்.