கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி
- வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கை விசாரித்து வரும் டெல்லி கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.
- கடந்த காலங்களில் அளித்த அனுமதியை அவர் தவறாக பயன்படுத்தியது இல்லை என்று நீதிபதி கூறினார்.
புதுடெல்லி:
கடந்த 2007-ம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ். மீடியா குழுமம், ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெற வெளிநாட்டு முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்ததில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜனவரி 4-ந் தேதி முதல் 12-ந் தேதிவரை ஆஸ்திரியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்ல அனுமதி கேட்டு, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கை விசாரித்து வரும் டெல்லி கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தனி நீதிபதி காவேரி பவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரம், சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவார் என்று கூறி, அமலாக்கத்துறை வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருப்பினும், நீதிபதி காவேரி பவேஜா, கார்த்தி வெளிநாடு செல்ல அனுமதி அளித்தார். கடந்த காலங்களில் அளித்த அனுமதியை அவர் தவறாக பயன்படுத்தியது இல்லை என்று நீதிபதி கூறினார்.