சட்டவிரோதமாக டெல்லியில் குடியேறிய 175 வங்காளதேசத்தினர் கண்டுபிடிப்பு
- வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
- டெல்லி போலீசார், சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினருக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கினர்.
புதுடெல்லி:
வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுபோல், டெல்லியில் குடியேறிய வங்காளதேசத்தினரை அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி தலைமை செயலாளருக்கும், போலீஸ் டி.ஜி.பி.க்கும் கவர்னர் வி.கே.சக்சேனா கடந்த 10-ந் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, கடந்த 11-ந் தேதி டெல்லி போலீசார், சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினருக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கினர்.
இதற்கிடையே, டெல்லி புறநகர் மாவட்டத்தில் எவ்வித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக குடியிருக்கும் வங்காளதேசத்தினரை கண்டறியும் ஆவண சரிபார்ப்பு பணி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கியது.
உள்ளூர் போலீசார் அடங்கிய தனிப்படையினர், மாவட்ட வெளிநாட்டினர் பிரிவு அதிகாரிகள், சிறப்பு பிரிவினர் ஆகியோர் இந்த சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். வீடு, வீடாக சென்று வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை கேட்டு வாங்கி பரிசோதித்தனர்.
சிலரது சொந்த ஊருக்கும் சென்று ஆவணங்களை சரிபார்த்தனர். சந்தேகத்துக்குரியவர்களின் உளவு தகவல்களை சேகரித்தனர்.
12 மணி நேரம் நடந்த இந்த சரிபார்ப்பு பணியில், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற சந்தேகத்தில் 175 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதுபோல், கடந்த 13-ந் தேதி, டெல்லி நகரப்பகுதியில் நடந்த பரிசோதனையில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினர் என்ற சந்தேகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி சதாரா போலீசார் கடந்த 12-ந் தேதி நடத்திய சோதனையில் 32 பேரை அடையாளம் கண்டறிந்தனர். இதன்மூலம், டெல்லியில் இதுவரை 1,500 வங்காளதேசத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.