மன்மோகன் சிங் நினைவிடத்துக்கு இடமளிக்க தாமதம்.. திட்டமிட்ட அவமதிப்பு என காங்கிரஸ் சாடல் - பாஜக பதில்
- மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
- தனது தந்தை பிரணாப் முகர்ஜி இறந்தபோது காங்கிரஸ் எவ்வளவு கேவலமாக நடத்தியது என்று அவரின் மகளும் ட்வீட் செய்துள்ளார்
2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 2 தடவை பிரதமராக இருந்து நாட்டை வழி நடத்தியவர் மன்மோகன் சிங். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் வீட்டிலிருந்து வந்தார்.
92 வயதான அவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன் தினம் இரவு 9.51 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் அன்று இரவு டெல்லி மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நேற்றைய தினம் தலைவர்கள் அவரது உடலுக்கு மரியாதை செலுத்திய நிலையில் இன்று அவரது உடல் நிஜாமாபாத் காட் பகுதியில் யமுனை நதிக்கரை அருகே தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக நேற்று காலை, மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் நினைவிடத்துக்கு இடம் அளிக்க மத்திய அரசு தாமதம் செய்தது அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று இரவு தனது எக்ஸ் பதிவில், "இன்று காலை, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை அளிக்கும் வகையில் நினைவிடம் கட்டப்படும் இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தார்.
அவரது உலகளாவிய அந்தஸ்துக்கும், சிறந்த சாதனைகளுக்கும், பல தசாப்தங்களாக தேசத்திற்குச் செய்த அளப்பரிய சேவைக்கும், இந்திய அரசால் அவரது இறுதிச் சடங்கு மற்றும் நினைவிடங்களுக்கு இடம் கிடக்கிக்கவில்லை என்பதை நம் நாட்டு மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை திட்டமிட்டு அவமதித்ததைத் தவிர வேறில்லை" என காட்டமாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக நிஜாமாபாத் காட் பகுதியில் மத்திய அரசு இடம் ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது.
மேலும் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும் விமர்சித்தது. மேலும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஜியின் மறைவுக்குப் பிறகு அவரை எப்படி நடத்தினார்கள் என்பதை காங்கிரஸ் நினைவுகூர வேண்டும்.
முன்னாள் குடியரசுத் தலைவரான தனது தந்தை பிரணாப் முகர்ஜி இறந்தபோது காங்கிரஸ் எவ்வளவு கேவலமாக நடத்தியது என்று அவரின் மகளும் ட்வீட் செய்துள்ளார் என்று சுட்டிக்காட்டி பாஜக காங்கிரசை சாடியுள்ளது.
இருப்பினும் மன்மோகன் சிங் உடல் தகனம் மற்றும் நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்க பாஜக ஒரு நாள் முழுவதும் கடைசி தருணம் வரை தாமதம் செய்தது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.