இன்று டெல்லி, நாளை கேரளா முதல்-மந்திரி பினராயிவிஜயனுக்கு முன்னாள் மத்திய மந்திரி எச்சரிக்கை
- இந்த வெற்றி ஊழல் மற்றும் ஆணவத்திற்கு எதிரானது.
- ஊழல் செய்பவர்களை மக்கள் அதிகாரத்தில் இருந்து துடைத்து விடுவார்கள்.
திருவனந்தபுரம்:
டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
கேரளாவிலும் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர். இதில் பங்கேற்ற பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான முரளீதரன் கூறியதாவது:-
'இன்று டெல்லி, நாளை கேரளா'. தேசிய தலைநகரில் நடந்த தேர்தல் முடிவுகள் ஊழல் செய்பவர்களுக்கு காத்திருக்கும் தலைவிதியின் அறிகுறியாகும்.
ஊழல் செய்பவர்களை மக்கள் அதிகாரத்தில் இருந்து துடைத்து விடுவார்கள் என்பதை தான் இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த வெற்றி ஊழல் மற்றும் ஆணவத்திற்கு எதிரானது.
கெஜ்ரிவாலின் நெருங்கிய நண்பர் பினராயி விஜயன். டெல்லி மதுபான ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களில் ஒருவருக்கு பாலக்காட்டில் மதுபான ஆலை அமைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
டெல்லி தேர்தல் முடிவுகள், ஊழல்வாதிகளுக்கு காத்திருக்கும் தலைவிதியை பற்றி பினராயி விஜயனுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். கேரளாவும் இதேபோன்ற தீர்ப்பை வழங்கும் என்பதையும் இது குறிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.