40 அடி உயர சுவரிலிருந்து குதித்து தப்பிய கைதி: 24 மணி நேரத்தில் தட்டித் தூக்கிய போலீஸ்!
- விடுமுறை தினம் என்பதால் குறைந்த அளவே காவலர்கள் இருந்தனர்
- கீழே விழுந்ததில் காலில் அடிபட்டும் ஆட்டோவில் தப்பி சென்றார்
கர்நாடகாவின் மத்திய பகுதியில் உள்ள நகரம் தாவணகெரே.
இங்குள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு பாலியல் தாக்குதல் புகார் வந்தது. புகாரை விசாரித்த காவல் அதிகாரிகள், அது உண்மை என கண்டறிந்து வசந்த் என்பவரை கைது செய்து தாவணகெரே நகர சப்-ஜெயிலில் அடைத்தனர்.
அந்த சிறையின் சுற்றுச்சுவர் 40 அடி உயரம் கொண்டது.
இந்த சிறையில் நேற்று முன் தினம் குறைந்த அளவே சிறை காவல் அதிகாரிகள் இருந்தனர். விடுமுறை தினம் என்பதால் வெளியிலும் குறைவான அளவே கடைகள் திறந்திருந்தன.
இதனையறிந்து வசந்த் சிறையிலிருந்து தப்பிக்க திட்டம் தீட்டினார்.
அதன்படி, 40 அடி உயர சுற்றுச்சுவரை சிறைக்குள் எப்படியோ ஏறிய வசந்த், தப்பிப்பதற்காக அதன் உச்சியிலிருந்து துணிந்து கீழே குதித்தார். இந்த முயற்சியில் கீழே விழுந்த அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இருந்தும் அங்கிருந்து வெளியே சென்று ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி தப்பித்து சென்றார்.
இதையடுத்து சிறைக்கைதி தப்பி சென்றதாகவும், அவரை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பசவநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறையால் ஒரு புகார் அளிக்கப்பட்டது. வசந்த் ஏறி குதித்த காட்சியும், காலில் அடிபட்டாலும் தப்பி செல்வதும், சிறையின் சுற்றுச்சுவர் அருகே ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.
இதனை கொண்டும், விசாரணையின் மூலமாகவும் வசந்த் ஹரிஹரா தாலுக்காவில் உள்ள துக்காவதி பகுதிக்கு சென்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற காவல்துறையினர் அவர் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்து பசவநகர் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
துரிதமாக செயல்பட்டு தப்பி சென்ற கைதியை 24 மணி நேரத்தில் காவல்துறை மீண்டும் பிடித்தது பலராலும் பாராட்டப்படுகிறது.
அதே நேரம், வசந்த் சிறையிலிருந்து தப்பிக்க உயரமான சுவற்றிலிருந்து கீழே குதிப்பதும், காலில் அடிபடுவதும் பதிவான காட்சி அடங்கிய கண்காணிப்பு கேமரா வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.