குடித்துவிட்டு அரசியலமைப்பு எழுதினார் என கூறும் கெஜ்ரிவாலின் வீடியோ உண்மையா?
- ஆம் ஆத்மி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இதே வீடியோவை பா.ஜ.க.வும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
புதுடெல்லி:
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடியோவைப் பகிர்ந்ததற்காக சில சமூக ஊடக பயனர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் டெல்லியைச் சேர்ந்த விபோர் ஆனந்த் என்ற வழக்கறிஞர் உள்பட 5 சமூக ஊடக பயனர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அந்த வீடியோவில், எந்தத் தொழிலாளியும் மது அருந்தக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் அரசியல் சாசனம் கூறுகிறது. அரசியலமைப்பை எழுதியவர் அதை எழுதும்போது குடிபோதையில் இருந்திருக்க வேண்டும் என எங்களில் ஒருவர் கூறினார் என பேசுவதாக பதிவாகி உள்ளது.
இந்நிலையில், சுமார் 9 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ பழைய வீடியோ என்றும், எடிட் செய்யப்பட்ட வீடியோ என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கெஜ்ரிவால் டாக்டர் அம்பேத்கரையோ அல்லது இந்திய அரசியலமைப்பையோ குறிப்பிடவில்லை என்பதும், காங்கிரஸ் கட்சியின் அரசியலமைப்பைப் பற்றி விவாதிக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.