இந்தியா (National)
null

'நவம்பர் 1 -19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம்' - காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்

Published On 2024-10-21 08:21 GMT   |   Update On 2024-10-21 09:48 GMT
  • அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
  • சிஆர்பிஎப் பள்ளி அருகே நடந்த குண்டுவெடிப்புக்குப் பாகிஸ்தானில் இயங்கும் காலிஸ்தான் அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

இந்தியாவில் கடந்த 1 வாரத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவை போலியானது என்றாலும் விமான சேவைகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியர்களுக்கு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் யாரும் பயணிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். பன்னுன் மீதான கொலை முயற்சி வழக்கில் தற்போது அமெரிக்காவில் தேடப்பட்ட இந்திய உளவுத்துறை முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தொடர்ந்து டெல்லியில் நேற்றைய தினம் சிஆர்பிஎப் பள்ளி அருகே நடந்த குண்டுவெடிப்புக்குப் பாகிஸ்தானில் இயங்கும் காலிஸ்தான் அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. இந்த அனைத்து சம்பவங்களும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவையாக இருக்கும் சூழலில் இந்த எச்சரிக்கையை பன்முன் விடுத்துள்ளார்.

சீக்கிய இனப்படுகொலையின் 40 வது ஆண்டு விழா விரைவில் வர உள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை பன்னுன் விடுத்துள்ளதாக யூகிக்க முடிகிறது. கடந்த வருடமும் பன்னுன் இதுபோன்று மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாதத்தின் அடிப்படையில் ஜூலை 2020 முதல் உள்துறை அமைச்சகத்தால் பன்னுன் பயங்கரவாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News