இந்தியா

வரதட்சணை மரணங்கள் பெரிய கவலையாக உள்ளது: உச்சநீதிமன்றம்

Published On 2025-03-03 21:26 IST   |   Update On 2025-03-03 21:26:00 IST
  • வரதட்சணை மரணங்கள் கடுமையான சமூகப் பிரச்சனையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
  • இதுபோன்ற வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்ட சூழ்நிலைகளை ஆழமாக ஆராய நீதிமன்றங்கள் கடமைப்பட்டுள்ளன .

வரதட்சணை மரணங்கள் கடுமையான சமூகப் பிரச்சனையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், இதுபோன்ற வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்ட சூழ்நிலைகளை ஆழமாக ஆராய நீதிமன்றங்கள் கடமைப்பட்டுள்ளன என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், திருமணம் முடிந்த இரண்டு வருடத்தில் கணவர் வீட்டில் பெண் இறந்து போனார். மாமனார், மாமியார் மற்றும் இரண்டு மைத்துனிகள் வரதட்சணை கேட்டு கொடுமையை படுத்தியதாலும், கொடூரமாக தாக்கியதாலும் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது அலகாபாத் உயர்நீதிமன்றம் நான்கு பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜாமின் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு மனு விசாரணையின் போது நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேக்தா ஆகியோர் மைத்துனிகள் இருவருக்கும் ஜாமின் வழங்கியது செல்லும், ஆனால் மாமனார் மற்றும் மாமியாருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ததுடன், வரதட்சணை மரணங்கள் கடுமையான சமூகப் பிரச்சினையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், இதுபோன்ற வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்ட சூழ்நிலைகளை ஆழமாக ஆராய நீதிமன்றங்கள் கடமைப்பட்டுள்ளன என தீர்ப்பு வழங்கினர்.

மேலும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக ஆதாரங்கள் சுட்டிக்காட்டும் நிலையில் இத்தகைய கொடூரமான செயல்களைச் செய்ததாகக் கூறப்படும் முக்கிய குற்றவாளிகள் பிணையில் இருக்க அனுமதிப்பது, அவர்கள் விசாரணையின் நியாயத்தை மட்டுமல்ல, குற்றவியல் நீதி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News