நேதாஜி இறப்பு தேதி விவகாரம்: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு
- நேதாஜியின் இறந்த தேதி குறித்த குறிப்புக்கு பா.ஜ.க. கடும் கண்டனத்தை தெரிவித்தது.
- பா.ஜ.க. விமர்சனத்துக்கு ராகுல் காந்தியும், காங்கிரசும் இதுவரை பதில் அளிக்கவில்லை.
கொல்கத்தா:
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த வியாழக்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், மகத்தான புரட்சியாளரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி. நேதாஜியின் தலைமை, தைரியம், சமூக நீதிக்கான அவரது போராட்டம் மற்றும் அவரது பங்களிப்பு சகிப்புத்தன்மை மற்றும் உள்ளடக்கம் இன்றும் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கமளிக்கிறது என பதிவிட்டார்.
மேலும், நேதாஜியின் படத்துடன் அவரது வாழ்நாள் ஜனவரி 23, 1897-ஆகஸ்ட் 18, 1945 என குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நேதாஜியின் இறந்த தேதி குறித்த இந்தக் குறிப்புக்கு பா.ஜ.க. கடும் கண்டனத்தை தெரிவித்தது. பா.ஜ.க.வின் விமர்சனத்துக்கு ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இதுவரை பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், நேதாஜியின் இறந்த தேதி குறித்த ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அகில பாரதியஇந்து மகாசபை சார்பில் தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக, இந்து மகாசபை மாநில தலைவர் சந்திரசூட் கோஸ்வாமி கூறுகையில், ராகுல் காந்தியும் அவரது முன்னோர்களும் எப்போதும் நேதாஜியின் நினைவுகளை இந்திய மக்களின் நினைவிலிருந்து அழிக்க முயற்சி செய்கிறார்கள். அவரை இந்திய மக்கள் தண்டிப்பார்கள். எங்களைப் பொறுத்தவரை நேதாஜி பற்றிய தகவல்களை யாராவது திரிபுபடுத்த முயன்றால் எதிர்ப்பு தெரிவிப்போம் என கூறினார்.