மகாராஷ்டிராவில் பரபரப்பு: 18 மீனவர்களுடன் திடீரென கடலில் தீப்பிடித்து எரிந்த படகு
- மீன்பிடி படகில் அதிகாலை 3 முதல் 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
- இதனால் படகில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் நகரில் ஆக்சி கடற்கரை பகுதியில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் மீன்பிடி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.
நேற்று அதிகாலை 3 முதல் 4 மணியளவில் அந்தப் படகு திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதனால் படகில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.
தகவலறிந்து இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் படகில் இருந்த 18 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனை ராய்காட் மாவட்ட எஸ்.பி. உறுதிப்படுத்தினார்.
சம்பவத்தின்போது, அந்த வழியே சென்ற இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த சாவித்ரிபாய் புலே என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்த மீன்பிடி கப்பல் தீப்பிடித்து எரிந்தபோது அதனை ரோந்து கப்பலில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். உடனே நிலைமையை உணர்ந்து மீனவர்கள் அனைவரையும் மீட்கும் பணியை மேற்கொண்டனர். இதில் 18 மீனவர்களும் மீட்கப்பட்டு மற்றொரு மீன்பிடி படகில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.