இந்தியா

தங்கம் கடத்தல் வழக்கு- நடிகை ரன்யா ராவ் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

Published On 2025-03-09 09:35 IST   |   Update On 2025-03-09 09:35:00 IST
  • கடந்த டிசம்பர் மாதம் 24-ந் தேதி துபாய் சென்ற ரன்யா ராவ் அங்கு 3 நாட்கள் தங்கி இருந்துள்ளார்.
  • தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லி, மும்பையை சேர்ந்த கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரு:

துபாயில் இருந்து விமானத்தில் 14 கிலோ 800 கிராம் தங்ககட்டிகளை தனது தொடை பகுதியில் கட்டிவைத்து கடத்தி வந்த கன்னடம், தமிழ் திரைப்பட நடிகையான ரன்யா ராவை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கடந்த 3-ந்தேதி அதிரடியாக கைது செய்தனர். இவர் ஐ.பி.எஸ்.அதிகாரியும், கர்நாடக வீட்டு வசதித்துறை இயக்குனருமான டி.ஜி.பி. ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள் ஆவார். மேலும் ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.4¾ கோடி தங்க நகைகள், ரொக்கப்பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கைதான நடிகை ரன்யா ராவ் விசாரணைக்கு பிறகு 14 நாள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவரை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது.

அதாவது நடிகை ரன்யா ராவ் துபாய், அமெரிக்காவுக்கு பயணம் செய்தது குறித்த தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு(2024) டிசம்பர் மாதம் 24-ந் தேதி துபாய் சென்ற அவர் அங்கு 3 நாட்கள் தங்கி இருந்துள்ளார். இதற்கு அடுத்தப்படியாக கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி அமெரிக்கா சென்ற ரன்யா ராவ் அங்கு 7 நாட்கள் தங்கி இருந்துள்ளார். அதேபோல கடந்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி முதல் மார்ச் 3-ந் தேதி வரை 5 முறை அவர் துபாய்க்கு சென்று வந்ததும் தெரியவந்தது. அவர் தங்கம் கடத்தலுக்காக தான் அமெரிக்காவுக்கும் சென்றாரா? எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவலை வைத்து அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் மீது சி.பி.ஐ. தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி, மும்பை, பெங்களூருவிலும் உடனடியாக விசாரணையை தொடங்கிவிட்டனர். அவர்கள் தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லி, மும்பையை சேர்ந்த கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறார்கள்.

மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் தகவல் பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வருவாய் நுண்ணறிவு பிரிவு விசாரணை முடிந்ததும் சி.பி.ஐ. அதிகாரிகள் ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரன்யா ராவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான விசாரணை பெங்களூரு பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நாளை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News