பெண்களின் ஆதரவும், ஆசியும் இல்லாமல் டெல்லியில் பாஜக அரசு அமைந்திருக்க முடியாது: ஜே.பி. நட்டா
- பெண்களை ஊக்குவிப்பதும், அதிகாரமளித்தலும் பாஜக-வின் கொள்கையாகும்.
- பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறோம்.
பா.ஜ.க.வின் மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தின நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ஜே.எல்.என். மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஜே.பி. நட்டா கூறியதாவது:-
டெல்லியில் பாஜக அரசு அமைவதில் மிகப்பெரிய பங்கு வகித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி அவர்களுடைய ஆதரவு மற்றும் ஆசி இல்லாமல் சாத்தியமல்ல.
பெண்களை ஊக்குவிப்பதும், அதிகாரமளித்தலும் பாஜக-வின் கொள்கையாகும். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறோம். நாட்டின் பெண்களிடையே சுய-நம்பிக்கையை நாம் உருவாக்கும் வரை, தன்னிறைவு பெற்ற இந்தியா (Atmanirbhar Bharat) மற்றும் வளர்ச்சி அடைந்த இந்தியா (Viksit Bharat) பார்வை சாத்தியமற்றது.
நிர்மலா சீதாராமன் நாட்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தால், ரேகா குப்தா டெல்லிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். பாஜக பெண் தலைவர்களை உயர் முடிவு எடுக்கும் பதவிக்கு உயர்த்துவதை உறுதிப்படுத்தும் பணிகளை செய்துள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க முடிவை எடுக்க இவ்வளவு தைரியத்தை பாஜகவால் மட்டுமே காட்ட முடியும். பெண்களுக்கு இதைவிட பெரிய மரியாதை எதுவும் இருக்க முடியாது.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் டெல்லி பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்க 5100 கோடி ரூபாய் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்ட செய்தியை ஜே.பி. நட்டா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.