இந்தியா

அழகான தாடி வைத்திருந்தால் அழகான பெண்கள் தேடி வருவார்களாம்- ஆய்வு சொல்லும் ருசிகர தகவல்

Published On 2025-03-08 14:18 IST   |   Update On 2025-03-08 14:18:00 IST
  • 1500 பெண்கள் தாடி வைத்த ஆண்களைத்தான் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.
  • இந்த காலத்தில் இளைஞர்கள் தாடி வைப்பதில் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதற்கு இதுதான் காரணம்.

அன்பே உன் அன்பை தாடி... தாடி... என்று அவள் பின்னால் அலைந்தேன். ஆனால் அவளோ என்னை தாடி வைத்து அலைய விட்டு விட்டாள்... என்று தான் ஒரு காலத்தில் காதலில் தோற்றுப் போனவர்கள் புலம்பினார்கள்.

ஒருவர் தாடி வளர்க்கிறார் என்றாலே அதன் பின்னணியில் ஏதோ ஒரு சோகம் இருக்கிறது என்று தான் அர்த்தம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது 'கிளீன்ஷேவ்' செய்து விட்டுத்தான் செல்வார்கள். பெற்றோர்களும் தங்கள் மகன்களை தாடி வைக்க அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. நம் கண்ணில் படும் ஆண்களில் 80 சதவீதம் பேர் தாடியுடன் தான் தெரிகிறார்கள். ஏன், மணமேடையில் இருக்கும் மணமகன் கூட தாடியோடுதான் இருக்கிறார்.

அடச்சீ... தாடி குத்துதுடா ஒழுங்கா ஷேவ் பண்ணுடா என்று பெண்களும் சொன்னார்கள். ஆனால் இன்று தான் நேசிக்கும் ஆடவன் தாடி வைத்திருந்தால் அதை பார்த்து மகிழ்கிறார்கள். அன்று கன்னத்தை கிள்ளிய கைகள் இன்று தாடியை வருடி சூப்பர்டா என்று சொல்கின்றன.

ஆனால் இன்று தாடியை பார்த்தே ஒரு இளைஞரை இளம்பெண்கள் முடிவு செய்து விடுகிறார்களாம். கிளீனாக ஷேவ் செய்து இருந்தால் அவர் 'சாக்லெட் பாய்...' அமுல் பேபி போல் இருப்பாராம். நேர்த்தியாக தாடி வைத்திருந்தால் அவர் வித்தியாசமான லுக்கில் தெரிவார். அவரிடம் பொறுமை இருக்கும். சின்சியராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருப்பார் என்பது பெண்கள் கணிப்பு.

அந்த மாதிரி ஆண் துணையோடு இருந்தால் பாதுகாப்பு கிடைக்குமாம். அதாவது பலம்மிக்கவராக இருப்பாராம். தங்களுக்காக சண்டை போடும் அளவுக்கு அவர்களிடம் துணிச்சல் இருக்குமாம்.

அதற்கு பெண்கள் சொல்லும் உதாரணம் தான் ஆச்சரியமாக இருக்கிறது. 'அந்த கால மன்னர்களின் படங்களை பாருங்கள். உலகம் முழுவதும் வெற்றி பெற்ற தலைவர்களை பாருங்கள். எல்லோர் முகத்திலும் தாடி இருக்கும். அந்த தாடி தான் அவர்களின் அழகுக்கும், வீரத்துக்கும் அடையாளம் என்பது அவர்கள் தரப்பு வாதம்.

அப்படி தாடியுடன் இருக்கும் ஆண்கள் சுதந்திரமானவர்களாக இருப்பார்கள். நம்மையும் சுதந்திரமாக வைத்துக் கொள்வார்கள். தனக்கு சரி என்று பட்டதை செய்து முடிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் பார்ட்னர்களாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல அப்படிப்பட்டவர்கள்தான் ஒரே பெண் பார்ட்னருடன் கடைசி காலம் வரை இருப்பார்களாம். கிளீன்ஷேவ் செய்யும் ஆண்கள் அடிக்கடி பார்ட்னர்களையும் மாற்றி விடுவார்களாம். என்னடா இது புதுக்கதையாக இருக்கிறது என்று வடிவேல் பாணியில் யோசிக்கிறீர்களா?

ரொம்ப யோசிக்காதீங்க. நம்பித்தான் ஆக வேண்டி உள்ளது. 2500 பெண்களிடம் இது தொடர்பாக கேட்டதில் 1500 பெண்கள் தாடி வைத்த ஆண்களைத்தான் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த காலத்தில் இளைஞர்கள் தாடி வைப்பதில் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதற்கு இதுதான் காரணம். பல இளைஞர்கள் ஷேவ் செய்வதை விட தாடியை பராமரிப்பதில் கூடுதல் நேரம் செலவிடுகிறார்கள். சீராக டிரிம் செய்வது, தாடியில் ஒரு முடிகூட தனியா நிற்காதபடி சீவி விடுவது, அடிக்கடி கைகளால் தடவி கொள்வது என்று ஆர்வமாக உள்ளார்கள்.

அழகான தாடி இருப்பது அழகான பெண்களுக்கு பிடிக்கும் என்றால் இளைஞர்கள் அப்படித்தானே இருப்பார்கள்.

திருமணத்துக்கு முன்பும் சரி. பின்பும் சரி. தாடி தான் அழகு என்று கருதுவதால் ஆண்களிடம் தாடி மவுசு அதிகரித்துள்ளது.

இதையறிந்து உங்கள் தாடி கருமையாக இருக்க வேண்டுமா...? இந்த ஒரு 'டை' போதும் என்று தாடி பராமரிப்புக்கென்றும் தனியாக கலர் டை வந்து விட்டது. சிகை அலங்காரம் செய்யும் சலூன்களில் கூட தாடி சீரமைப்புக்கு தனி கட்டணம் வசூலிக்கிறார்கள்.

Tags:    

Similar News