இந்தியா

மருத்துவ மாணவி கொலை விவகாரம்: பிரதமரிடம் முறையிட மாணவியின் பெற்றோர் கோரிக்கை

Published On 2025-03-09 09:38 IST   |   Update On 2025-03-09 09:38:00 IST
  • நியாயம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை.
  • இப்படியொரு மரணம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் பிரதமர் மோடியை சந்தித்து அவரிடம் நியாயம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பேசிய பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார், "நான் பிரதமர் மோடியை சந்தித்து, இந்த விவகாரத்தில் அவர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன். கொல்லப்பட்ட மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவரிடம் கூற விரும்புகிறேன்."

"எங்கள் மகள் பெரிய கனவு கொண்டிருந்தாள். அவளுக்கு இப்படியொரு மரணம் ஏற்படும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. அவள் எங்களை விட்டுச் சென்று ஏழு மாதங்கள் கழிந்துவிட்டது, ஆனால் நீதி எங்கே? எங்களிடம் அவளின் இறப்பு சான்றிதழ் கூட இல்லை. பெண் மருத்துவருக்கு அவர் பணியாற்றும் இடத்திலேயே பாதுகாப்பு இல்லையெனில், வேறு எங்கு தான் பாதுகாப்பு இருக்கும்?," என்று கூறினார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தாயர் கூறிய கருத்துக்கள் குறித்து பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. அக்னிமித்ரா பால், "பிரதமரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நமது பிரதமர் அவர்களுக்கு (பெற்றோருக்கு) நேரம் கொடுத்து, அவர்களின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்பார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது," என்று தெரிவித்தார்.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில நிதித்துறை அமைச்சர் சந்திர்மா பட்டாச்சார்யா கூறும் போது, "நாட்டின் எந்த குடிமகனுக்கும் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு அவரை சந்திக்கும் உரிமை உள்ளது. ஆனால், நமது தலைவர் மம்தா பானர்ஜி தான் இந்த விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்து முதல் நடவடிக்கையை எடுத்தார் என்பதை மறந்துவிடக்கூடாது," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News