ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. நெரிசலில் 2000 வாகனங்கள் - இமாச்சலில் 5000 டூரிஸ்டுகள் மீட்பு
- காசிகுண்ட் நகரில் பனிப்பொழிவைத் தொடர்ந்து 2,000 வாகனங்ள் நெரிசலில் சிக்கின.
- ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 80% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன
ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு நேற்று [வெள்ளிக்கிழமை] தொடங்கியுள்ளது.
காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது, இதில் தெற்கு காஷ்மீர் மற்றும் மத்திய காஷ்மீரின் சமவெளிகளில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது.
தலைநகர் ஸ்ரீநகரில் சுமார் 8 [இன்ச்]அங்குல பனிப்பொழிவு பதிவாகியுள்ளது, கந்தர்பால் மற்றும் சோனாமார்க்-இல் 7-8 அங்குலங்கள் பதிவாகியுள்ளன. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் உள்ள ஜோஜிலா ஆக்சிஸில் 15 அங்குல பனியும், அனந்த்நாக் மாவட்டத்தில் 17 அங்குலங்கள் வரை பனிப்பொழிவும் பதிவாகியுள்ளன.
பஹல்காம், புல்வாமா, ஷோபியான் மற்றும் பிற பகுதிகளிலும் கணிசமான பனிப்பொழிவு பதிவாகி உள்ளது.
பனிப்பொழிவு தொடர்ந்து பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் நகரில் நேற்று பனிப்பொழிவைத் தொடர்ந்து சுமார் 2,000 வாகனங்ள் நெரிசலில் சிக்கின.
போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை கடுமையான பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டது. ஸ்ரீநகர் வரும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது, இன்று [சனிக்கிழமை] சுமார் 80% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே இமாச்சலப் பிரதேசத்தின் குலு[ Kullu] பகுதியில் உள்ள ஸ்கை ரிசார்ட்டான சோலாங் நாலாவில் பனிபொழிவால் சிக்கித் தவித்த சுமார் 5,000 சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் நேற்று மீட்கப்பட்டனர்.
லாஹவுல்-ஸ்பிடி, சம்பா, காங்க்ரா, குலு, சிம்லா மற்றும் கின்னவுர் உள்ளிட்ட மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் நேற்று [வெள்ளிக்கிழமை] கடுமையான மழை மற்றும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.