வாக்குவாதத்தில் மனைவியின் உதட்டைக் கடித்த கணவன்.. 16 தையல் போட்ட டாக்டர்கள்
- தான் பேசும் நிலையில் இல்லாததால், எழுத்துப்பூர்வமாக போலீசாரிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார்.
- தனது மைத்துனர் மற்றும் மாமியார் மீதும் அப்பெண் புகார் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா கிராமத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்ட பயங்கர திருப்பம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுராவில் உள்ள கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக, கணவன், மனைவியின் உதடுகளை பற்களால் கொடூரமாக கடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பெண் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணின் உதட்டில் மருத்துவர்கள் 16 தையல்கள் போட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண், தான் பேசும் நிலையில் இல்லாததால்,எழுத்துப்பூர்வமாக போலீசாரிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார். கணவருடன் சேர்ந்து, தனது மைத்துனர் மற்றும் மாமியார் மீதும் அப்பெண் புகார் அளித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை, மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கணவர் விஷ்ணு வீட்டிற்கு வந்து எந்த காரணமும் இல்லாமல் சண்டையிட்ட்டார். தான் சமாதானம் செய்ய முயன்றும் கணவன் தன்னை அடிக்கத் தொடங்கினான்.
அவரது சகோதரி காப்பாற்ற முயன்றபோது, கணவன் சகோதரியையும் அடித்தான். இதற்கிடையில் கணவன் திடீரென தன்னை தாக்கி உதட்டைக் கடித்ததால் ரத்தம் கொட்டியது என்று அப்பெண் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பெண் அக்கம் பக்கத்தினரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறிந்ததும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவனின் தாக்குதலை மாமியாரும் மைத்துனரும் தடுக்கவில்லை என்று அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். புகாரை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தலைமறைவாகியுள்ளனர்.