கும்பமேளா மனிதனை கடவுளுடன் இணைக்கும் பாலமாக கருதுகிறேன்- மம்தாவுக்கு மேற்குவங்காள கவர்னர் பதில்
- மகா கும்பமேளா அல்ல மரண கும்பமேளா என்று மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து இருந்தார்.
- நாட்டின் பாரம்பரியத்தின் உச்சமாக பார்க்கிறேன்.
கொல்கத்தா:
பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையன்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் உள்பட 30 பேர் பலியானார்கள். இதுபற்றி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பலி எண்ணிக்கையை உத்தரபிரதேச அரசு மறைக்கிறது. அது மகா கும்பமேளா அல்ல மரண கும்பமேளா என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு மேற்குவங்காள கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் பதிலடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதுபற்றி அவர் கூறுகையில், நான் எந்த சர்ச்சையிலும் நுழைய விரும்பவில்லை. இது ஒரு ஜனநாயக அமைப்பு. முதல்-மந்திரியின் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் அவருக்கு கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. என்னைப் பொறுத்தவரை, ஒரு கவர்னராக நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளா, மனிதனை கடவுளுடன் இணைக்கும் பாலமாக கருதுகிறேன். நாட்டின் பாரம்பரியத்தின் உச்சமாக பார்க்கிறேன் என்றார்.