பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அமளி: மோடி-அதானி படம் பொறித்த பைகளுடன் காங்கிரஸ் போராட்டம்
- டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் கனிமொழி நோட்டீஸ்.
- பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம், பேரணி.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கியது.
அதானி குழும விவகாரம், உ.பி. கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவற்றை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசும்போது, சபைக்கு அதன் சொந்த மரியாதை, உயர்தரம், கண்ணியம் உள்ளது. அவற்றை யாரும் தாழ்த்த முயற்சிக்க வேண்டாம். நாம் அனை வரும் சபையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்.
ஆனால் சில நாட்களாக நல்லதல்லாத சில விஷயங்கள் நடந்ததை நான் கண்டேன். இந்த சம்பவங்களில் மூத்த தலைவர்கள் கூட பங்கேற்றது கவனிக்கத்தக்கது, இது நல்லதல்ல என்றார்.
பின்னர் கேள்வி நேரத்தை பிர்லா தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் பிரச்சனைகளை எழுப்ப முற்பட்டனர்.
அவர்களிடம் சபாநாயகர் சபையை சாதாரணமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் சபையில் தொடர்ந்து அமளி நிலவியதால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
அதேபோல் மேல்-சபை இன்று கூடியதும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர். இரு தரப்பு எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பியதால் கூச்சல்-குழுப்பம் நிலவியது. இதனால் மேல்-சபையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நேற்று ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.
இந்த நிலையில் டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக குறித்து பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் தி.மு.க. பாராளுமன்றக் குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் வழங்கினார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாக்கூரும் நோட்டீஸ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று காலை பாராளுமன்றத்தின் பிரதான குழு அறையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் கூட்டம், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்தது.
இதில் பிரியங்கா காந்தி உள்பட எம்.பிக்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் காங்கிரஸ் எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி, அதானி ஒன்றாக இருக்கும் புகைப்படம் பொறித்த பையை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் அதானி விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராகவும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையே பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், மாநிலங்களவையில் உள்ள அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும், மக்களவையில் உள்ள சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் பல கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர்.
ராகுல் காந்திக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் மக்களின் வலி மற்றும் பிரச்சனைகளை அவரால் உணர முடியவில்லை. ஆனால் அதை மற்ற எம்.பி.க்கள் உணருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.