இந்தியா

இந்தியா கூட்டணி உடையும் அபாயம்- ராகுல் காந்திக்கு எதிர்ப்பு வலுக்கிறது

Published On 2024-12-08 13:14 IST   |   Update On 2024-12-08 13:14:00 IST
  • ராகுல் காந்தி சட்டப் புத்தகத்தையும், அதானி மீது குற்றம் சுமத்துவதையும் கைவிடவில்லை.
  • சமாஜ்வாடி எம்.பி.க்கள் சம்பல் கலவரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டு இருந்தனர்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தபோது பாரதிய ஜனதாவை தோற்கடிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டீரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாடி, கம்யூனிஸ்டுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.

இந்த கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படவில்லை என்ற அதிருப்தி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்தபோது கையில் ஒரு சிறிய சட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, 'மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க திட்டமிடுகிறார்' என்று பிரசாரம் செய்தார்.

மேலும் அதானிக்கும் மோடிக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும், அதானிக்கு நாட்டை மோடி தாரை வார்த்து விட்டதாகவும் பிரசாரம் செய்தார். என்றாலும் மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரசுக்கு படு தோல்வியே மிஞ்சியது.

என்றாலும் ராகுல் காந்தி சட்டப் புத்தகத்தையும், அதானி மீது குற்றம் சுமத்துவதையும் கைவிடவில்லை. கடந்த 25-ந்தேதி முதல் பாராளுமன்றம் கூடிய நாளில் இருந்து தினமும் அவர் பாராளுமன்றத்தில் அதானி பிரச்சனையை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்கிறார். இது இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் ராகுல் மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மழை சேதத்திற்கு கூடுதல் நிதி கேட்க திட்டமிட்டு இருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மேற்கு வங்காள பிரச்சனையை எழுப்ப ஆர்வமாக இருந்தனர். சமாஜ்வாடி எம்.பி.க்கள் சம்பல் கலவரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் ராகுல் தொடர்ந்து அதானி பிரச்சனையை மட்டும் பேசியதால் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் செயல்பாடுகளில் இருந்து சற்று ஒதுங்க தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்று வழி நடத்த தயார் என்று அறிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், 'எனக்கு வாய்ப்பளித்தால் மேற்கு வங்காள முதல்-மந்திரி பதவியை கவனித்துக் கொண்டே இந்தியா கூட்டணியை வழி நடத்தி செல்ல முடியும்' என்று கூறி இருக்கிறார்.

இது இந்தியா கூட்டணியில் மிகப்பெரிய சல சலப்பை உருவாக்கி இருக்கிறது. மம்தா பானர்ஜிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

சரத்பவார் இது குறித்து கூறுகையில், "இந்தியா கூட்டணியை வழி நடத்த கேட்கும் உரிமை மம்தா பானர்ஜிக்கு இருக்கிறது. இந்தியா கூட்டணியை வழி நடத்த அவருக்கு ஆற்றல் இருக்கிறது. அந்த பொறுப்புக்கு அவர் தகுதியானவரும் கூட" என்றார்.

அதுபோல கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும், மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த பிரச்சனையை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா கருத்து தெரிவித்து உள்ளார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் நேரடியாகவே ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக ராகுலை ஏற்க இயலாது என்று கூறி உள்ளனர்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் அறிவிப்பை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். மம்தா பானர்ஜி தேசிய தலைவராக மாற வேண்டும் என்ற ஆசையில் இப்படி கூறி இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

வெறும் தோரணைக்காகவே மம்தா பானர்ஜி பேசுகிறார் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கிணடல் செய்துள்ளனர். மேலும் மாநில கட்சி தலைவர் எப்படி தேசிய கூட்டணியை வழி நடத்தி செல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன் காரணமாக இந்தியா கூட்டணியில் மேலும் பிளவு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.

Tags:    

Similar News