இந்தியா (National)

பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு 42 கி.மீ. தூரம் பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி

Published On 2024-09-21 06:19 GMT   |   Update On 2024-09-21 06:19 GMT
  • முக்கிய இடங்கள் வழியாக சென்ற பேரணி நள்ளிரவில் ஷியாம் பஜார் அருகே நிறைவடந்தது.
  • பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு சென்றதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இந்த விவகாரத்தில் டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும், பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டும் கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு பெண் டாக்டரின் கொலைக்கு நீதி கேட்டு பேரணி நடத்தினர்.

இதில், டாக்டர்கள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு ஹைலேண்ட் பூங்காவில் தொடங்கிய இந்த பேரணி சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது.

இந்த பேரணி ரூபி கிராசிங், வி.ஐ.பி. பஜார், சயின்ஸ் சிட்டி போன்ற முக்கிய இடங்கள் வழியாக நள்ளிரவில் ஷியாம் பஜார் அருகே நிறைவடந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் எரியும் தீப்பந்தங்களை ஏந்தி சென்றனர்.

மேலும் பலர் மூவர்ண கொடி மற்றும் ப்ளாஷ் விளக்குகளை அசைத்தவாறு சென்றனர். பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு சென்றதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜூனியர் டாக்டர்களுடன் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து 42 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜூனியர் டாக்டர்கள் அறிவித்தனர். மேலும் அவர்கள் இன்று பணிக்கு திரும்பினர்.

Tags:    

Similar News