மகா கும்பமேளா 'அர்த்தமற்றது..' லாலு பிரசாத் கருத்து - இந்துவிரோதி என்கிறது பாஜக
- இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்.
- ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள்
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். ரெயில்வே துறையில் நிர்வாக தோல்வியே கூட்டநெரிசலுக்கு காரணம் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கூட்டநெரிசல் குறித்து கருத்து தெரிவித்த பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவரும், முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் சர்ச்சை ஒன்றை கிளப்பினார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, மிகவும் சோகமான சம்பவம் நடந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். இது ரெயில்வேயின் தவறு. ரெயில்வேயின் தவறான நிர்வாகத்தாலும் அலட்சியத்தாலும் இவ்வளவு பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் மகா கும்பமேளாவில் நிலவும் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த கும்பமேளாவின் அர்த்தம் என்ன, கும்பமேளாவே அர்த்தமற்றது" என்றார்.
இதை கையில் எடுத்த பீகார் பாஜக செய்தித் தொடர்பாளர் மனோஜ் சர்மா, ஆர்ஜேடி தலைவர்கள் எப்போதும் இந்துக்களின் மத உணர்வுகளை அவமதித்து வந்துள்ளனர்.
மகா கும்பமேளாவை 'அர்த்தமற்றது' என்று ஆர்ஜேடி தலைவர் கூறியது, இந்து மதம் குறித்த அக்கட்சியின் மனநிலையை அம்பலப்படுத்தியுள்ளது. அவர்கள்(ஆர்ஜேடி) ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.