இந்தியா

மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோவிலில் நெய் அபிஷேகம் இன்றுடன் நிறைவு

Published On 2025-01-18 10:36 IST   |   Update On 2025-01-18 10:36:00 IST
  • மகர விளக்கு பூஜை முடிந்து வருகிற 20-ந்தேதி கோவில் நடை சாத்தப்படுகிறது.
  • பக்தர்கள் இன்றும், நாளையும் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை சீசன் கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி முடிவடைந்தது. மகரவிளக்கு பூஜை டிசம்பர் 31-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. மகரவிளக்கு பூஜை தொடங்கியதில் இருந்தே தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் மகர விளக்கு பூஜை முடிந்து வருகிற 20-ந்தேதி கோவில் நடை சாத்தப்படுகிறது. அன்று காலை பந்தளம் அரண்மனை பிரதிநிதி சாமி தரிசனம் செய்வார். அதன் பிறகு மகரவிளக்கு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படும்.

மகரவிளக்கு பூஜை முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. ஆன்லைன் முன்பதிவு மட்டுமின்றி உடனடி முன்பதிவு செய்தும் கோவிலுக்கு செல்லலாம் என்பதால் பக்தர்கள் வருகை கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.

பக்தர்கள் இன்றும், நாளையும் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நாளை இரவு வழக்கமான பூஜைகள் முடிந்து அரிவராசனம் பாடப்பட்டு இரவு கோவில் நடை சாத்தப்படும். அதே நேரத்தில் மகர விளக்கு காலத்தில் ஐயப்பனுக்கு செய்யப்படும் நெய் அபிஷேகம் இன்று காலையுடன் முடிவடைந்தது. பக்தர்கள் தரிசனம் செய்யக்ககூடிய இறுதி நாளான நாளை(19-ந்தேதி) நெய் அபிஷேகம் நடைபெறாது.

மண்டல பூஜை காலத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். அதேபோல் மகர விளக்கு பூஜை காலத்திலும் கடந்த ஆண்டை விட அதிக அளவிலான பக்தர்கள் வந்திருக்கின்றனர். இதன் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சபரிமலை வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News