மாணவியை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மாணவர்கள்: சமூக வலைதளங்களில் பரப்பியதால் பரபரப்பு
- நிர்வாணமாக்கி வலுக்கட்டாயமாக வீடியோ எடுக்க முயற்சி
- அதிர்ந்து போன மாணவியின் தந்தை போலீசில் புகார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா பகுதியில் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர்கள்-மாணவிகள் இணைந்து படிக்கும் இந்த பள்ளியில் பாலா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பயின்று வருகின்றனர்.
அந்த பள்ளியில் பாலா பகுதியை சேர்ந்த ஒரு மாணவி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி கடந்த 10-ந்தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றிருந்தார். பள்ளியின் ஓய்வு நேரத்தில் அந்த மாணவி வகுப்பறையில் அமர்ந்திருந்தார்.
அப்போது அவரது வகுப்பில் படித்து வரும் 7 மாணவர்கள், மாணவியின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி உள்ளனர். அது மட்டுமின்றி மாணவியை தங்களது செல்போன்களில் நிர்வாணமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.
மாணவர்களின் மிரட்டலுக்கு பயந்து அந்த சம்பவத்தை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தனது பெற்றோர் என யாரிடமும் அந்த மாணவி கூறவில்லை. இந்தநிலையில் வகுப்பறையில் வைத்து எடுத்த மாணவியின் நிர்வாண வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது.
இதையறிந்த அந்த மாணவி அதிர்ச்சியடைந்தார். இதனால் அவர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த படி நேற்று முன்தினம் (16-ந்தேதி) பள்ளிக்கு மீண்டும் சென்றார்.
அப்போது அவரை ஏற்கனவே நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மாணவர்கள், மதிய இடைவேளை நேரத்தில் மாணவியை மீண்டும் நிர்வாணமாக்கி வலுக்கட்டாயமாக வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த மாணவி அந்த மாணவர்களின் பிடியில் இருந்து தப்பி வகுப்பறையில் இருந்து வெளியே ஓடினார். பின்பு அவர் கதறி கூச்சலிட்டபடி ஆசிரியர்கள் ஓய்வறைக்கு ஓடிச்சென்றார். அங்கிருந்த ஆசிரியர்கள் என்ன நடந்தது? என்று விசாரித்தனர்.
அப்போது வகுப்பறையில் வைத்து மாணவர்கள் தன்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டதாகவும், தற்போது மீண்டும் நிர்வாண வீடியோ எடுக்க முயன்றதாகவும் மாணவி தெரிவித்தார். அதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவியை சமாதானம் செய்தனர்.
பின்பு அதுபற்றி பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோரும் அறிந்தனர். பள்ளியின் வகுப்பறையில் தங்களின் மகளுக்கு நேர்ந்த இந்த கொடூர செயலால் அதிர்ந்து போன மாணவியின் தந்தை, அதுபற்றி போலீசில் புகார் செய்தார்.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே தனது மகளுக்கு இந்த சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டிய அவர், மாணவி யிடம் அத்துமீறலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னார். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப் படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரை நிர்வாண வீடியோ எடுத்ததாக கூறப்படும் 7 மாணவர்கள் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.
மேலும் மாணவி-மாணவர்களின் பெற்றோர், பள்ளி ஆசிரி யர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளும் விசா ரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியில் நடந்த இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கேரள மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டி ருக்கிறார்.
மேலும் பாதிப்புக்குள்ளான மாணவியின் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாணவி படித்த பள்ளியின் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-
பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 16-ந்தேதி புகார் அளித்தவுடன் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தோம். மேலும் உடனடியாக அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுத்தோம்.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளியின் நெறிமுறைக்குழு முடிவு செய்தது. மாணவி விவகாரம் குறித்து சைல்டு லைன் அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இவ்வாறு பள்ளி நிர்வாகம் கூறியிருக்கிறது.
பள்ளி வகுப்பறையில் 9-ம் வகுப்பு மாணவியை அவருடன் படிக்கும் சக மாணவர்களே நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சமூக வலைதளங் களில் பரப்பிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.