உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு சென்ற ஷாரிக்- நாசவேலையில் ஈடுபட திட்டமா?
- மங்களூருவில் 3 கோவில்கள் உள்பட 6 இடங்களில் பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்ற ஷாரிக் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, ஷாரிக்கை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
பெங்களூரு:
மங்களூரு பகுதியில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் மற்றும் பயங்கரவாதி ஷாரிக் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் ஷாரிக் 45 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் ஷாரிக்கின் செல்போனை ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது மங்களூருவில் 3 கோவில்கள் உள்பட 6 இடங்களில் பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்ற ஷாரிக் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் தென்னிந்தியாவில் பயங்கரவாத அமைப்பை நிறுவ திட்டமிட்டதும் அம்பலமானது. கோவை, குமரி, கேரள மாநிலம் கொச்சி ஆகிய பகுதிகளுக்கும் ஷாரிக் சென்று வந்தார். இதனால் அங்கும் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அங்கு ஷாரிக் யார், யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். ஷாரிக் செல்போனில் உள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டாலும் அவை சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு, மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைத்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, ஷாரிக்கை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் ஷாரிக்கின் செல்போனை ஆய்வு செய்ததில் மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பயங்கரவாதி ஷாரிக் கடந்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி உடுப்பியில் உள்ள புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கிருஷ்ணன் கோவிலின் ரத வீதியில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.
அங்கு வைத்து அவரது செல்போனை பெண் ஒருவர் வாங்கி பேசி உள்ளார். அதன்மூலம் ஷாரிக் உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் ரத வீதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் ஷாரிக்கிடம் செல்போன் வாங்கி பேசிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடுப்பி கிருஷ்ணன் கோவிலிலும் நாசவேலையில் ஈடுபட ஷாரிக் சதி திட்டம் தீட்டினாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷாரிக் பற்றி தினந்தோறும் புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.