மணிப்பூர் நிலவரம் குறித்து மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
- இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.
- அமெரிக்கா, எகிப்து சுற்றுப்பணத்தை முடித்து விட்டு நேற்று இரவு பிரதமர் டெல்லி திரும்பினார்.
புதுடெல்லி:
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. கடந்த 50 தினங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது.
பா.ஜனதா மந்திரிகளின் வீடுகள், அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வன்முறை கும்பலுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே ஆங்காங்கே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தாலும் அங்கு அமைதி திரும்பவில்லை.
ஒரு கிராமத்தில் 12 போராளிகளை ராணுவ வீரர்கள் பிடித்தபோது அவர்களை கொண்டு செல்லவிடாமல் 1,500 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து முற்றுகையிட்டது. இதனால் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க ராணுவத்தினர் 12 பயங்கரவாதிகளையும் விடுவித்தனர்.
இந்த நிலையில் மணிப்பூர் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா, எகிப்து சுற்றுப்பணத்தை முடித்து விட்டு நேற்று இரவு பிரதமர் டெல்லி திரும்பினார்.
அவர் மணிப்பூர் நிலைமை குறித்து மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் அமித்ஷா விளக்கினார்.