இந்தியா

இதுவரை இல்லாத உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி

Published On 2024-06-26 11:57 GMT   |   Update On 2024-06-26 11:57 GMT
  • ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ரெ டெக் சிமெண்ட் ஏற்றம் கண்டன.
  • மகிந்த்ரா அண்டு மகிந்த்ரா, டாடா ஸ்டீல், டெக் மகிந்த்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பங்குகள் சரிவை சந்தித்தன.

மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியான அடுத்த இரண்டு நாட்கள் மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) உயர்வை சந்தித்தன.

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால் கடுமையான சரிவை சந்தித்தன. அதன்பின் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்கும் என உறுதியான பிறகு பங்குச் சந்தை உயர்ந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) ஆகியவை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்வை சந்தித்து வர்த்தகமானது.

சென்செக்ஸ்

மும்பை பங்கு சந்தை வர்த்தகம் நேற்று 78,053.52 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 78,094.02 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல உயர்ந்து வண்ணம் இருந்தது. மதியம் 3 மணியளவில் 78,759.40 புள்ளிகளை தொட்டு வர்த்தகம் ஆனது. இது இதுவரை இல்லாத உச்சமாகும். அதன்பின் சற்று குறைந்து வர்த்தகம் சென்செக்ஸ் 78,674.28 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று 0.80 சதவீதம் உயர்ந்தது.

நிஃப்டி

அதேபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டியும் இதுவரை இல்லாத அளவிற்கு 23,889.90 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. நேற்றைய வர்த்தகம் நிஃப்டி 23721.30 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,723.10 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.

சற்று ஏற்ற இறக்கம் கண்ட நிலையில் புதிய உச்சமான 23,889.90 புள்ளிகளில் வர்த்தகமாகி 23,868.80 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.

30 சென்செக்ஸ் நிறுவனங்களில் ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ரெ டெக் சிமெண்ட், சன் பார்மா, அதானி போர்ட், ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, பஜாஜ் பினான்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்வை கண்டன.

மகிந்த்ரா அண்டு மகிந்த்ரா, டாடா ஸ்டீல், டெக் மகிந்த்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

ஆசிய மார்க்கெட்டுகளான சியோல், டோக்கியோ, ஷாங்காள், ஹாங் காங் மார்கெட்டுகளும் இன்று உயர்ந்து காணப்பட்டன.

Tags:    

Similar News